Thursday, June 09, 2011

சுயாதீன விசாரணைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது குறித்து மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இப்போரின்போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு காத்திரமான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றம் இழைத்தவர்கள் எவராயினும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச நியமங்களைக் கொண்டிருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடரில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிப் பதிவு உண்மையானது என தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக கிறிஸ் ரொப் ஹெய்ன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிப் பதிவு குறித்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இலங்கையில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை தன்னால் உறுதி செய்ய முடிவதாக அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.