Thursday, June 09, 2011

உதயன் நாளிதழ் செய்திக்கு கூட்டமைப்பு மறுப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் இணைய வாய்ப்பு என்று யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ் அறிக்கையின் முழு விபரம் வருமாறு,


ஆசிரியர்
உதயன் நாளிதழ்
யாழ்ப்பாணம் .

08.06.2011
அன்புடையீர்,
உதயன் நாளிதழ் செய்திக்கு மறுப்பு
கூட்டமைப்பினர் அரசில் இணையும் வாய்ப்பு…
மேற்படி தலைப்பிடப்பட்டு 08.06.2011 (புதன்கிழமை)ஆம் திகதிய நாளிதழின் மூன்றாம் பக்கச் செய்தி தொடர்பாக எனது கடுமையான மறுப்பினைத் தெரிவிக்கின்றேன்.

நடந்து முடிந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டு எமது மக்களி;ன் வாழ்க்கையே முடமாக்கப்பட்டுப் போயுள்ள இக்காலத்தில், அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பூரணத்துவமற்ற மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக்காத அரைகுறை மீள்குடியேற்ற நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள எமது மக்களின் இன்றைய உடனடி இருப்பிட, பொருளாதார, மற்றும் ஜீவனோபாயத் தேவைகளைக் குறைந்த அளவிலாவது நெறிப்படுத்தவும் நாம் இழந்துவிட்ட அரசியல் உரிமைகளை, எமது அடையாளத்தை மீட்டெடுக்கவும் குருதி சிந்திய எமது மக்களுக்காக அவர்களின் அனைத்து நலன்களுக்குமாகவே எனதும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அனைத்து உழைப்பும் செயற்பாடுகளும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் நானும் இணைந்தால் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குப் பெருந்தொகை நிதி அரசால் ஒதுக்கீடு செய்துதரப்படும் எனவும் தங்கள் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமிழ் பேசும் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தற்போது ஆளும் அரசின் அமைச்சர்களாக உள்ளனர். அரசின் இந்தப் பிரதிநிதிகளாலேயே மீள்குடியேறிய எமது மக்களின் உடனடித் தேவைகள், மற்றும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக உருப்படியான எதையும் நிறைவேற்ற முடியாத நிலைமையே இங்கு காணப்படுகின்றது.

எமக்கு மக்களால் வழங்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக வரையறைக்குட்பட்டு அதனூடாகக் குரல்கொடுத்து, அரசால் நிறைவேற்றப்படாமல் தவிர்க்கப்படும் எமது மக்களின் நலன் சார்ந்த அனைத்து விடயங்களையும் கூடிய இயலுமானவரை நிறைவேற்றித் தருவதையே பணியாக எனது மாணவப் பருவம் முதல் இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றேன்.

எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான நடவடிக்கைள் சர்வதேச மட்டத்தில் வியாபித்து உலகநாடுகளின் தலையீட்டினால் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ள தற்போதைய நிலவரத்தில் அதற்கு உரமூட்டக்கூடிய நல்ல தரமான, மக்களை உணர்வூட்டக்கூடிய தரவுகளை, செய்திகளை வழங்குவதற்கு மாறாக, மக்கள் பிரதிநிதியான என்னை அவதூறு செய்வதாக எண்ணி தங்கள் பத்திரிகையின் ஜனநாயகத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் தாழ்த்தும் விதமாக இவ்வாறான செய்திகளை இனிமேலும் பிரசுரிக்காமல் தடுக்க ஏற்ற நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.