Thursday, June 09, 2011

யுத்தம் முடிந்த பின்னர் கிழக்கில் 300 பேர் காணாமற் போயுள்ளனர்!

கிழக்கு விடுவிக்கப்பட்டு இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பொன். செல்வராசா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

அவசரகாலச் சட்டம் நாட்டில் இப்போது இருக்கின்ற நிலையில், கடந்த மாதம் மாத்திரம் மட்டக்களப்பில் நான்கு கொலைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு. படையினரிடம் மாத்திரமே துப்பாக்கிகள் இருக்கின்றபோது எப்படி இந்தச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன? வன்னி துப்புரவு செய்யப்பட்ட பிறகும் சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவசரகாலச் சட்டம் அவசியம் என்ற போதிலும் அது சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தச் சட்டத்தை ஒவ்வொரு மாதமும் நீடிப்பதன் மூலம் என்ன பிரயோசனம் இருக்கின்றது?

வடக்கு, கிழக்கில் அரச காணிகளில் சிலர் அத்துமீறிக் குடியேறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிபரால் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட 3ஆயிரம் ஏக்கர் காணி ஊர்க்காவற்படையினருக்கு பயிர்ச் செய்கைக்காக விற்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை அவர்களுக்கு முள்கம்பிகளையும் முள்கம்பி கட்டைகளையும் வழங்கியுள்ளது. அரச காணியில் அத்துமீறிக் குடியேற அரசும் உதவி செய்கின்றது. கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது முதல் இதுவரை மட்டக்களப்பில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைத் திரட்டி, நாம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்.

இருப்பினும், ஒருவரையாவது, பொலிஸாரால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவசரகாலச் சட்டத்தை ஒவ்வொரு மாதமும் நீடிப்பதில் எதுவித பிரயோசனமும் இல்லை. அந்தச் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.