Monday, May 09, 2011

ஐ.நா அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக கூடுகின்றது

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 12 ஆம் நாள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த கூட்டத்தில் ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதிக்கப்படுவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என்ற பரிந்துரையையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கிறீன் கட்சியை சேர்ந்த 50 உறுப்பினர்கள் மேற்கொண்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறீலங்கா தூதுவர் ரவிநாதா ஆரியசிங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகமும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை சக்திவாய்ந்த ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதில் இருந்து சிறீலங்கா தப்பமுடியாது என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம் அவசர கூட்டத்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றியம், சிறீலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.