Sunday, May 29, 2011

புலம்பெயர் தமிழரின் முயற்சிகள் சாத்தியமளிக்காதாம்!

இலங்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துரையாடப்படமாட்டாது என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

47 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில், ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை தொடர்பான சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர சில மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ளன.

ஆனால் இலங்கை தொடர்பான இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அநேகமாக செப்டெம்பரில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தொடருக்கு பிற்போடப்படுவதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா பொதுசெயலாளருடனான சந்திப்பின் போது உள்ளகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன கூறியிருந்தார். இலங்கைக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதும் இதற்கு ஒரு காரணமாகும் என்று அந்த ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு ஆசியா, வடஅபிரிக்காவின் மனித உரிமை நிலைமைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மேற்குலக நாடுகளின் கவனத்தை அதிகளவில் ஈர்த்திருப்பதும் மற்றொரு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதமும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இவர்களின் முயற்சிகள் வெற்றியளிப்பது சாத்தியமில்லை என்று மேலும் அந்த ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.