Thursday, April 14, 2011

சனநாயக விழுமியங்களையும் மனித நேய மாண்புகளையும் மதிக்கும் பிரான்ஸ் மண்ணில் இனஅழிப்பை மேற்கொள்ளும் சிறீலங்கா வரவேற்கப்படுவதா? எமது எதிர்ப்பை அமைதி வழியில் வெளிப்படுத்துவோம்.

பிரான்சில் ஆர்ஜன்டன் நகரில் அந்த நகரத்தின் நகரசபையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் பிரதான அதிதி நாடாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டு இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் தமிழ் இனத்துக்கு எதிரான மிகக் கொடூரமான இனஅழிப்பையும் இனச் சுத்திகரிப்பையும் இனவதையையும் தொடர்ந்து புரிந்துவரும் சிறீலங்கா அரசு அதிதி நாடாக ஆர்ஜன்டன் நகரசபையால் வரவேற்கப்படுகின்றது.

ஏப்பிரல் 29ம் திகதி ஆரம்பிக்கும் இந்நிகழ்வுகள் மே மாதம் 2ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளன.

இந்த நவீன உலகின் கண்கள் பார்த்திருக்க 2009ம் ஆண்டு வன்னி மண்ணில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட வெறித்தனமான தாக்குதலில் எழுபதினாயிரம் தமிழ் மக்கள் சிதைத்தழிக்கப்பட்ட கொடுமையின் அவலத்தின் அதிர்வுகள் அடக்குவதற்கு முன்னரே பிரான்ஸ் மண்ணில் சிறீலங்கா அரசு அதிதி அந்தஸ்து வழங்கப்பட்டு வரவேற்கப்படுவது அதிர்ச்சிக்குரியது வேதனையானது வெட்கக்கேடானது.

மனித உரிமை அமைப்புக்கள் உலக நாடுகள் பலவற்றின் கண்டனங்கள் எச்சரிக்கைகள் தீர்வு குறித்த வலியுறுத்தல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான வற்புறுத்தல்கள் என்பனவற்றை எல்லாம் சர்வ சாதாரணமாக அலட்சியப்படுத்தி புறந்தள்ளிவிட்டு சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இலங்கைத் தீவில் இருந்து முற்றாகத் துடைத்தழிக்கும் அல்லது முற்றாக பௌத்த சிங்களவர்களாய் கரைத்துவிடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றது.

இந்த நிலையில் சிறீலங்கா அரசை ஆர்ஜன்டன் நகரசபை அதிதியாக அழைப்பதை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் பிரான்ஸ் தமிழர் நடுவம் தனது கவலையையும் அதிர்ப்தியையும் எதிர்ப்பையும் ஆர்ஜன்டன் நகரசபைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

அத்துடன் அதிதி அந்தஸ்த்துக்கு கிஞ்சித்தும் தகுதிபடைக்காத சிறீலங்கா அரசை வரவேற்கும் முடிவை மீள்பரிசீலனை செய்து அந்த நிகழ்வை ரத்துசெய்யுமாறு பிரான்ஸ் தமிழர் நடுவம் ஆர்ஜன்டன் நகரசபையைக் கோருகின்றது.

தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த சிங்களத்தின் கரங்களைக் குலுக்கி பிரான்ஸ் மண் அசுத்தமாகிவிடக்கூடாது என்பது எமது கோரிக்கை. எமது வேண்டுகோள்கள் தமிழ் மக்களின் அதிருப்திகள் எதிர்ப்புகள் வேதனைகளை மீறி தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் எமது மக்களின் சார்பாகவும் மனிதஉரிமைகள் மனித நேயத்தில் பேராலும் உலக மனச்சாட்சியின் பேராலும் அதிதிகளாக அழைக்கப்படும் சிறீலங்காப் பிரதிநிதிகளிடம் முன்வைக்கக்கோரும் முக்கியமான விடயங்களை நாம் ஆர்ஜன்டன் நகரசபையிடம் முன்வைத்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு சுயாதீனமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்காவிற்குள் அனுமதிக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் தற்போதும் இழைக்கப்பட்ட இழைக்கப்பட்டுவரும் கொடுமைகள் குற்றங்கள் குறித்து அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்கள் சர்வதேச விசாரணையாளர்கள் சென்று விசாரிக்கவும் அறிந்துகொள்ளவும் தகவல்கள் திரட்டவும் தடைகள் இன்றி அனுமதிக்கப்படவேண்டும்.

சிறீலங்காவின் ஆயுதப்படைகளால் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ்ப் போர்க் கைதிகள் பற்றிய முழுமையான விபரங்கள் வெளியிடப்படவேண்டும். அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் போர்க் கைதிகளை தொர்புகொள்ளவும் அவர்கள் பற்றிய தகவல்களைப் பெறவும் சுதந்திரமாக அனுமதிக்கப்படவேண்டும்.

தேசிய விடுதலைக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும்.

முக்கியமான இந்த விடயங்களை முன்வைக்கும் நாம் இதுவிடயத்தில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் தமது அதிருப்தியையும் கவலையையும் எதிர்ப்பையும் ஆர்ஜன்டன் நகர சபைக்கு அனுப்பிவைக்குமாறு கோருகின்றோம்.

சிறீலங்கா அரசு அதிதி நாடாக அழைக்கப்படும் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள பிரெஞ்சு அமைப்புக்கள் சில இணைந்த சனநாயகவழிப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த சனநாயகவழிப் போராட்டங்களில் தமிழர் நடுவமும் பங்கெடுத்துக்கொள்ளுகின்றது.
அந்த அமைப்புக்களின் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் தொடக்க நாளான ஏப்பிரல் 29ம் திகதி தமிழ் மக்கள் அங்கு சென்று தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கோருகின்றோம்.

இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து நாம் பின்னர் அறியத் தருகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.