Saturday, April 23, 2011

எதிர்வரும் நாட்கள் தமிழ் மக்கள் தமது இராஜதந்திர முயற்சிகளில் உச்சத்தை தொடவேண்டிய காலம்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.

ஆனால் சிறீலங்கா அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து அறிக்கைக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் மக்களும், அமைப்புக்களும் ஈடுபடவுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் எமது செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிகாரமற்றது என தெரிவித்துவரும் சிறீலங்கா அரசு அதற்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதும், அதற்கு எதிராக கையெழுத்துக்களை பெற்றுவருவதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நாவின் அறிக்கையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் தற்போதைய ஆட்சியாளர்களும், போர்க்குற்றவாளிகளும் நன்கு உணர்ந்துள்ளதாக வன்னியை சேர்ந்த தமிழ் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்தும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்துக்களை பலவந்தமாக பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மகன் நமால் ராஜபக்சா முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு என்ற போர்வையில் சிறீலங்கா படையினருக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஒன்னிற்காக அவர் நேற்று (22) கிளிநொச்சிக்கு வந்தபோதே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வலுப்படுத்தி, அதில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் ஒரு இனஅழிப்பு நடைபெற்றுவருவதை உலகிற்கு உணர்த்த முடியும் என புலம்பெயர் நாட்டை தளமாகக் கொண்;ட தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் இன அழிப்பு நடைபெற்றுவருவதை அனைத்துலக மட்டத்தில் உறுதிப்படுத்துவோமாக இருந்தால், அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் அழிக்கப்படும் இனத்தின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட முடியும். எனவே ஐ.நாவின் அறிக்கை என்பது சிறீலங்காவில் இனஅழிப்பு நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் நாட்கள் என்பது தமிழ் மக்கள் தமது இராஜதந்திர முயற்சிகளில் உச்சத்தை தொடவேண்டிய காலம். நாம் அவசரமாக பின்வரும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
• இராஜதந்திர சந்திப்புக்களை மேற்கொள்ளுதல்

• ஐ.நாவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுதல்.

• புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரச துர்துவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவுகளை திரட்டுதல்.

• அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுடன் உறவுகளை வலுப்படுத்தி, அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல்.

• அனைத்துலக ஊடகங்களின் ஆதரவுகளை அறிக்கைக்கு ஆதரவாக திரட்டுதல்.

• அறிக்கைக்கு ஆதரவாக பேரணிகளை நடத்துதல்.

• புரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக்கோரி ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுத்தல்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.