Wednesday, April 13, 2011

போர்க் குறற்ம் தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் பிரதி மரியாதையின் நிமித்தம் இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை கூறவென ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை நேற்றுக் கையளித்தது. அதன் ஒரு பிரதி கொழும்பு அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு மரியாதைக்காக அது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டதாக ஐ.நா. பொதுச் செயலரின் அலுவலகம் தெரிவித்தது.

இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்களும் அனைத்துலகச் சட்ட மீறல்களும் இடம்பெற்றன என்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்றும் அனைத்துலக அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன. இதனை அடுத்து, எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஐ.நா. பொதுச் செயலாளர், மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார்.

கடந்த பல மாதங்களாக விசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பெற்ற இந்த நிபுணர் குழு, தனது அறிக்கையை நேற்று பொதுச் செயலாளரிடம் கையளித்தது. நீண்ட நாள்களாகத் தாமதிக்கப்பட்டு வந்த அறிக்கை நேற்று கையளிக்கப்பட்டது என்பதை பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் உறுதிப்படுத்தி அறிவித்தார்.

அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதன் ஒரு பிரதி இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. "அறிக்கை பொதுப் பார்வைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, ஒரு மரியாதைக்காக அதன் ஒரு பிரதியை பொதுச் செயலர் இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்'' என்றார் பேச்சாளர் பர்கான். அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பான் கீ மூன், அது தொடர்பில் பணியாற்றிய மூன்று நிபுணர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகப் படித்த பின்னர் அது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்து வரும் நாள்களில் ஐ.நா. பொதுச்செயலர் முடிவு செய்வார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்று ஐ.நா. பேச்சாளரிடம் கேட்ட போது, இலங்கை அரசுடன் அதனைப் பகிர்ந்துகொள்வது தவிர வேறு எந்த முடிவும் உடனடியாக எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதேவேளை, இலங்கை போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டாலும் அது உடனடியாக வெளிப்படுத்தப்பட மாட்டாது; அல்லது ஒருபோதும்

வெளிப்படுத்தப்படாமலேயே போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு இன்னர் சிற்றி பிரஸ் இணையத்தளம் நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.