Sunday, April 24, 2011

தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி: விஜயகாந்த்

ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர்.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை.

ப. சிதம்பரம் சொன்ன சிதம்பர ரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா?போர் தொடர்ந்தபொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா?

அப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும்,

சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது, பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று ஐ.நா. சபை இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது.

இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் கருணாநிதி, “ஏற்கனவே 1991-ல் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கிறேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்.

ஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா? ஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதல்வர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி ராஜபட்சவுடன் கை குலுக்க வைக்கிறார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா? இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில்.

தேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

1956-ம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதியின் இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார்? இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.

அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, கருணாநிதியையும் தான். பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.