Thursday, April 14, 2011

அடுத்த கட்டம் குறித்த முடிவுகள் சில தினங்களில் – பான் கீ மூன் அறிவிப்பு!

இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்னசெய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம்பர் மாதம் ஆரம்பித்திருந்தது.

இலங்கை அரசின் கடும் எதிர்ப்புக்கள், அதிருப்திக்கு மத்தியில் இந்தக்குழு இலங்கைக்கு செல்லாமலே தனது ஆய்வுகளை மேற்கொண்டு செவ்வாயன்று தனது அறிக்கையை கையளித்துள்ளது. இதன் ஒரு பிரதி இலங்கைஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் நிபுணர் குழுவிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக் கொண்ட செயலாளர் நாயகம் பான் கீ மூன், நிபுணர்களின் பணிக்காகத் தமது நன்றியைத் தெரிவித்ததுடன் அறிக்கையை மிகவும் கவனமாக ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சில தினங்களில் முடிபெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக வகை கூறுதல் மற்றும் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக கைக்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கும் இந்த வழிமுறைகளைச் செயற்படுத்துதல் தொடர்பில் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய சர்வதேச மட்டத்திலான நடைமுறைகள், அது தொடர்பிலான வேறு அனுபவ முன் மாதிரிகள் தொடர்பான சிபாரிசுகளைத் தெரிவிப்பதற்குமாக மூவர் அடங்கிய இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுக்கி தருஸ்மன் தலைமையில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீபன் ரட்னர் ஆகியோர் கடந்த வருடம் மே மாதம் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

30 வருடங்களாகத் தொடர்ந்த இலங்கையின் இன முரண்பாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த பின்னணியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து வெற்றியடைந்ததாக இலங்கை அரச ங்கம் அறிவித்திருந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்ததாக அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யுத்தம் முடிபடைந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தம் நடைபெற்ற பகுதிக்கு மேலாகப் பறந்து சென்று பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஐ.நா செயலாளர் நாயகத்திற்கும் ஜனா திபதி மகிந்த ராஜபக்­விற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட இணை அறிக்கையின் தொடர்ச்சியாகவே நிபுணர் குழு நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் யுத்தம் முடிபடைந்த பின்னர் இறுதிக்கட்ட யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு ஐ.நா அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மனிதவுரிமைகள் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் சுதந்திரமாகச் சென்று பார்வையிடுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றது.

இந்தநிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு வகையும் பொறுப்பும் கூறுவ தற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நிபுணர்குழு நியமிக்கப்பட்டது என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்த குழுவினர் இலங்கை சென்று நிலைமைகள் தொடர்பான ஆராய்வதற்குரிய சந்தர்ப்பத்தை இலங்கை அரசு வழங்காத நிலையில் அங்கு செல்லாமலே தனது ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.