Wednesday, April 20, 2011

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கோரி வைகோ, நெடுமாறன் ஏப் 25-ல் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழர்களை கொடூரமாக படுகொலை செய்த சிங்கள அரசையும் ராஜபக்சேவையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று கோரி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்த பின்னணியில் ஈழத் தமிழ் இனத்தின் அவலம் மிக்க ஓலக்குரல் ஐ.நா.வின் மனசாட்சி கதவை ஓங்கித் தட்டியதால் அதன் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இலங்கைத் தீவில் நடந்ததை விசாரிக்க மூவர் குழுவினை நியமித்தார்.

அனைத்து நாடுகளுடைய நிர்பந்தத்தால் மூவர் குழு இலங்கையை விசாரிக்க முடிந்தது. தமிழர்களின் கண்ணீர் பிரதேசத்தில் அக் குழுவினர் சரியான ஆய்வு நடத்த இயலவில்லை. இருப்பினும் தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளரிடம் அக் குழு அறிக்கை தந்துள்ளது.

அந்த அறிக்கையின் படி அனைத்துலக மனித நேயச் சட்டத்தையும், மனித உரிமைச் சட்டத்தையும் அப்பட்டமாக மீறியவாறு லட்சக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொலை செய்திருக்கிறது. பத்திரிகை, ஊடகங்களின் குரல்வளையை நெறித்துள்ளது.

வெள்ளை வேன்கள் எனும் எமன்களை அனுப்பி எண்ணற்றோரை இருக்கும் சுவடு தெரியாமல் ஆக்கியுள்ளது. தாக்குதல் நடை பெறாத பாதுகாப்பு வளையங்கள் என அறிவித்த அந்த இடங்களுக்குள் உயிர்பிழைக்க தஞ்சம் புகுந்த 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களில் பெருமளவு தமிழ் மக்களை சிங்கள அரசு இன வெறித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகம் உணவு விநியோகிக்கும் இடங்கள் அனைத்தும் குண்டு வீச்சுக்கு இலக்காயின. மருத்துவமனைகள் இருக்கும் இடங்கள் எனத் தெரிந்து கொண்டே அவற்றின் மீது இடைவிடாத குண்டு வீச்சை வான்வெளித் தாக்குதலை இலங்கை விமானப்படை செய்துள்ளது.

2011 ஜனவரி-மே மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சித்திரவதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து குறிப்பாக இளைஞர்களைப் படுகொலை செய்ததோடு தமிழ் இளம் பெண்களை கற்பழித்துக்கொன்ற கொடுமைகளையும் செய்தது.

அரசுக்கு எதிரான ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.பொதுச் செயலாளர் தக்க விசாரணை நடத்த வேண்டுமென்று குழு பரிந்துரை செய்துள்ளது.

2006-ஆம் ஆண்டிலேயே ஸ்விட்சர்லாந்து, நியூசிலாந்து நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை வரிந்து கட்டிக் கொண்டு இந்திய அரசு தோற்கடித்தது.

தமிழ் இனப்படுகொலை நடத்திட சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் மத்திய அரசு 2009 தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரமுயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது இந்திய அரசு தான்.

கூண்டில் சிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வந்து வரவேற்றுக் கொண்டாடிய இந்திய அரசு இன்னமும் இலங்கை அரசை ஆதரிக்கின்ற வேலையில் ஈடுபடுமானால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பகிரங்கப் பங்காளி எனும் குற்றச்சாட்டுக்கு மேலும் ஆளாகும்.

இலங்கை அரசுடன் ஆன ராஜிய உறவுகளை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. மன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கைக்கு எதிராக இலங்கையில் ராஜபக்சே ஆள் திரட்டுகிறார். பேரணி என்று சவால்விடுகிறார்.

உலக நாடுகளின் கவனம் ஈழத் தமிழரின் அவலம் குறித்து திரும்பி இருக்கும் இந்த வேளையில் ஈழத் தமிழன் நாதியற்றுப் போய் விடவில்லை என்று அனைத்துலகிற்கும் அறிவிக்கும் வகையில் தாய்த் தமிழகத்து தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டியது தலையாய கடமையாகும்.

சிங்கள அரசைக் கூண்டில் ஏற்றவும், போர்க்குற்றங்களை விசாரித்து சர்வதேச குற்ற வியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும் ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டவும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 25 (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பழ.நெடுமாறனும், நானும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியினரும் பங்கேற்கும் இந்த ஆர்ப் பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கழக கண்மணிகளையும் தமிழ் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.