Wednesday, April 27, 2011

ஐ.நாவின் 196 பக்க அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் தமிழில் !

ஐ.நாவின் 196 பக்க அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. பெரும்சிரமத்துக்கு மத்தியில், ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை தமிழ் மக்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சில உணர்வாளர்களால் இது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் உள்ள சாராம்சத்தையும், முக்கிய குறிப்புகளையும் நாம் இங்கே தருகிறோம்.

சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:

சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.

வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.

மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர். ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது. வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை

� எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.

� வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.

� மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.

� போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.

� போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:

� மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.

� வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.

� பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.

� பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.

� பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.

� தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.

சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:

� விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.

� அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.

� போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.

� ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.

பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு

இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்:

சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

பரிந்துரை -1: விசாரணைகள்

நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:

� சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

� நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.

� ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.

பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.

4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.

5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.

8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

� தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.

� அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

� நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

� குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

� சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்

போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை

வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.

2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

நன்றி: ஈழம் ஈ நியூஸ்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.