Wednesday, July 07, 2010

ஆர்ப்பாட்டங்களுக்கு ஐ.நா. கண்டனம்

கொழும்பில் ஐ.நா மன்ற அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு தனது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருப்பதாக ஐ.நா மன்றத் தலைமைச் செயலருக்காகப் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பின்னதாக பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஹக், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கும் ஜனநாயக உரிமையை மதிக்கும் அதே நேரத்தில், ஐ.நா மன்றப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது, இலங்கையில் ஐ.நா மன்றம் அன்றாடம் செய்து வரும் மக்களுக்கு தேவையான முக்கியமான பணிகளுக்கு இடைஞ்சல் தரும் செயலாகும் என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதால், இது குறித்து அரசுக்கு ஆட்சேபங்களை தாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுயிருந்தனர்.

சென்ற வருடம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரச படைகள், புலிகள் என்று இரு தரப்பினரும் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் பற்றிய தனது விசாரணைகளை ஐ.நா. நிறுத்திவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் சென்ற மாதம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த விசாரணைகளை 'விரும்பத்தகாத தலையீடு' என்று கூறி, அவற்றுக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்தனர். ஐ.நா. ஊழியர்கள் அலுவலகக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுவதை அவர்கள் தடுத்திருந்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.