உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நடைபெற்று முடிந்த அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற செய்த நெதர்லாந்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று கேப்டவுனில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவே நெதர்லாந்து அணியை சந்தித்தது. உருகுவே நட்சத்திர வீரர் சாரஸ் கால்இறுதியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்த போட்டியில் விளையாடவில்லை. நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. போட்டி ஆரம்பமாகியதும் எந்த பரபரப்பும் இல்லாமல் பந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். மைதானத்தின் இடது பக்கத்தில் இருந்து இடது காலால் அடிக்கப்பட்ட பந்து 30 அடி தொலைவை மிக வேகத்தில் கடந்து கோல்கம்பத்துக்குள் புகுந்தது. இந்த உலக கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் புரோன்காஸ்ட் அடித்த முதல் கோல் இதுதான். அனைத்து கோல்களையும் விட அதி அற்புதமான முறையில் இந்த கோல் அடிக்கப்பட்டது.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. பதிலுக்கு கோல் அடிக்க உருகுவே போராடியது. ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து தலைவர் அடித்த கோலுக்கு பதிலடி கொடுத்தார் உருகுவே தலைவர் போர்லான். சுமார் 25 அடி தொலைவில் இருந்து இவரால் உதைக்கப்பட்ட பந்து ஜபுலானி நெதர்லாந்து கோல்கீப்பர் கைக்குள் சிக்காமல் அழகாக வளைந்து சென்று வளைக்குள் தஞ்சமடைந்தது.
இந்த உலக கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் போர்லான் அடித்த 4ஆவது கோல் இதுவாகும். தற்போது அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் போர்லான் உருகுவேக்காக 68 சர்வதேச போட்டிகளில் விளையாடி 28ஆவது கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கோலையடுத்து முதல் பாதி ஆட்டம் 1க்கு1 என்று சமநிலையில் முடிந்தது.
பிற்பாதியில் பந்தை தன் கட்டுக்குள் வைத்து ஆர அமர யோசித்து யோசித்து விளையாடியது நெதர்லாந்து. உருகுவே அபாயக்கரமான எதிரியாக மாறியதே இந்த மாற்றத்துக்கு காரணம்.68ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான்டெர்வார்ட் அடித்த பந்தை உருகுவே கோல்கீப்பர் முஸ்லெரோ தடுத்தார். அந்த பந்து மற்றொரு நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபனிடம் சென்றது. அதனை வந்த வேகத்தில் வெளியே அடித்து வீணடித்தார் ராபன்.
தொடர்ந்து 70ஆவது நிமிடத்தில் ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலை அடித்தார். அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜான் ராபன் 3ஆவது கோலை அடித்தார். டர்த் குயித் கொடுத்த பந்தை தலையால் முட்டி ராபன் கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து 3-1 என்று முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அடிக்கப்பட்ட இரு கோல்களால் உருகுவே வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.ஆனாலும் போராட்டத்தை கைவிடவில்லை. இறுதியில் 92ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோல் அடித்தார். ஆனால் மேற்கொண்டு கோல் அடிக்க நேரம் இல்லை. ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.