கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது தவிர்த்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவ் விழா தொடர்பாக வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள முன்னணி திரை நட்சந்திரங்களுடன் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால், தமிழ்த் திரையுலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் காட்டிய எதிர்ப்பின் காரணமாக இவ்விழா ஆரம்பமாவதற்கு முன்பே பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முறை தொடர்பாக சிங்கள முன்னணி நட்சத்திரங்களின் மத்தியிலும் பலத்த அதிருப்தி ஏற்பட்டதையடுத்து இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவிர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந் நிகழ்ச்சிக்கு சமூகமளித்திருந்த ஒரு சில இந்திய நட்சத்திரங்களின் நடவடிக்கைகள் காரணமாக சிங்கள முன்னணி நட்சத்திரங்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரந்தெனிய, ஜக்ஸன் அன்ரனி போன்ற நடிகர்கள் கூட நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது அந் நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர்..
இந் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்சவும் அவரின் மகன் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்த போதிலும் சிறிது நேரமே அவர்கள் விழாவில் சமூகமளித்திருந்தனர்.
சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைத்து நாட்டின் மீது படிந்துள்ள இனப்படுகொலைப் படிமத்தை மாற்றவும் சுற்றுலா அபிவிரித்தி மற்றும் வர்த்தக முதலீட்டு நோக்கங்களை கருத்திற் கொண்டும் பெரும் பொருட் செலவில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
ஆனாலும் தென்னிந்திய திரையுலகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான எதிர்ப்புக்கள் காரணமாக இத்திரைப்பட விழாவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வர்த்தக மாநாடும் பெரும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் (IFFA) தூதுவராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை முதல்நாள் நிகழ்ச்சியின் போதே வெளிப்படுத்தி இருந்ததாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி, நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் நடைபெற்ற உலக வர்த்தக மாநாடும் பெரும் ஏமாற்றத்துடன் முடிவடைந்ததாகவே தெரியவந்துள்ளது.
இந்த வர்த்தக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச இரண்டு மணி நேரம் தாமதமாகவே மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனால் அதிருப்தியுற்ற இந்திய முன்னணி வர்த்தகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படையாகக் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இம் மாநாடு இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதால் அன்று மாலையே கொழும்பிலிருந்து இந்தியா திரும்ப இருந்த வர்த்தகர்கள் பலர் விமானத்தை தவறவிட்டுள்ளனர்.
இந்திய முன்னணி நடிகரான சல்மான் கான் கலந்து கொண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் சிறிலங்கா, இந்திய பிரபலங்களின் அணிகளுக்கிடையே நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டப் போட்டியும் மிகவும் கேலிக்கூத்தாகவே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், விழாவில் கலந்து கொண்ட இந்திய திரைப்படத் துறையினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மொத்தத்தில் சிறிலங்க அரசு சுமார் 450 மில்லியன் ரூபா செலவழித்து ஏற்பாடு செய்திருந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தோல்வி தென்னிந்திய திரைப்படத் துறையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.
தமிழ்நாட்டில் இவ்விழாவிற்கெதிரான முதற் குரலை கவிஞர் தாமரையே எழுப்பியிருந்தார். இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கம், இளந்தமிழர் இயக்கம், மே 17 இயக்கம் மற்றும் தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு என்பவற்றுடன் பல தமிழ் உணர்வாளர்களும் தம் குரலை உரத்து எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






அப்படி தன வேண்டும் நாய்கல் இந்தியாவில் இருந்துகொண்டே தமிழனுக்கு அதரவு கொடுக்கவில்லை அதற்கு கிடைத்த பரிசு
ReplyDelete