Tuesday, June 08, 2010

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா மகிந்தா? - இல்லை என்கிறார்கள் பல இந்தியர்கள்!

'இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு காத்திரமான வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதனையும் செய்யப் போவதில்லை.

இலங்கையின் தேசிய நல்லிணக்கம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டுள்ள கருத்துக்கும், இலங்கையின் தேசிய நலன்களில் கரிசனை கொண்ட ஏனையோரின் கருத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது.

சிறிலங்காவின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.

ஆனால், இவ் விவகாரம் தொடர்பில் இந்தியா தனது அழுத்தங்களைப் பிரயோகிக்குமா என்பது குறித்து சந்தேகமாகவே இருக்கின்றது. இவ் விவகாரம் தொடர்பில் இந்தியா தயக்கத்துடன் செயற்படுவதாகவே தோன்றுவதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னையொரு பெரிய அரசனாகவே எண்ணிச் செயற்படுகின்றார்.'

இவ்வாறு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இலங்கை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர் பி. சகாதேவன் கருதுவதாக இந்திய செய்தி நிறுவனமான ஐயுNளு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்கம் குறித்து மகிந்த ராஜபக்சவுடன் இந்தியா ஆராயவுள்ளது எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் காத்திரமான பங்கினை வகித்து வரும் இந்தியா, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இலங்கையின் தேசிய நல்லிணக்க விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகின்றது.

இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எத்தகைய திட்டங்களை வைத்துள்ளார் என்பது குறித்து இவ்விரு நாடுகளின் தலைவர்களும் ஆராயவுள்ளனர்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதிவியேற்றதில் இருந்து இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்து வருகின்றார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரிய வெற்றியினைத் தனதாக்கிய மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பலம் பொருந்திய ஜனாதிபதிகளில் ஒருவராகத் திகழ்கின்றார்.

இந் நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணக்கூடிய அரசியல் பலம் மகிந்த ராஜபக்சவிடம் இருப்பதாகவும், இப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான தேவை தற்போது எழுந்திருப்பதாகவும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, 2004ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மன்மோகன் சிங் அன்று முதல் இலங்கையின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் உறுதிமொழிகள், சிறுபான்மைச் சமுகங்களின் அபிலாசைகள் மற்றும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான சிங்களக் கடும் போக்காளர்களின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் இலங்கைப் பிரச்சினையின் சிக்கல் நிறைந்த தன்மையினை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிந்து வைத்துள்ளார்.

இலங்கையின் இன நல்லிணக்க முயற்சிகளிலும், போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும் இந்தியா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந் நிலையில், வடக்;கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப கொழும்பு மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு தன்னால் பங்களிப்பு வழங்க முடியும் என புதுடில்லி நம்புகின்றது.

இதன் அடிப்படையில், போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், புனரமைப்பு, மீள்கட்டுமாணம், தொழில் வாய்ப்புக்கள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் என பல்வேறுபட்ட நடவடிக்கைகளுக்காக இந்தியா இதுவரை 2,300 கோடி ரூபா செலவழித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்தும் விடயத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றே இந்திய மக்களில் பலரும் நம்புகின்றார்கள்' என அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.