Sunday, June 06, 2010

மகிந்த ராஜபக்சவிடம் நிரந்தரத் தீர்வுக்கு வலியுறுத்துக! இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை விரைவாக மீளக் குடியேற்றம் செய்ய மகிந்த ராஜபக்சவை புதுடில்லி வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் மீளக்குடியேற்றப்படுவார்கள் என சிறிலங்கா அரசு உறுதி அளித்திருந்ததை அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்னும் சுமார் 80,000 தமிழ் மக்கள் முகாம்களில் வசித்து வருவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அம் மக்கள் தமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருப்பது தொடர்பாக தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதையும், நிரந்தர அரசியல் தீர்வு மூலம் தங்களது மறுவாழ்வுக்கான நீதியை எதிர்பார்த்து அம் மக்கள் காத்திருப்பதாகவும் இக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான தங்களது சந்திப்பின் போது இவ்விரண்டு விடயங்கள் குறித்து தாங்கள் எடுத்துக்கூற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகக் கட்சி மற்றும் பொதுவமைப்புக்கள் தமிழ்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.