Sunday, June 06, 2010

சிங்கப்பூரில் ஜீ.எல்.பீரிஸ் - லியாம் பொக்ஸ் சந்திப்பு!

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரு தரப்பினரும் சென்றிருந்த வேளையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில், இலங்கையின் அரசியல் நிலவரம், மீள் குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டனுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்புக் குறித்தும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருக்கு ஜீ.எல்.பீரிஸ் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சமாதான மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இச் சந்திப்பில் லியாம் பொக்ஸ் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும், பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையிலான முதற் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூரில் தங்கியுள்ள நாட்களில் அவுஸ்திரேலியா, தாய்லாந்து, கொரியா ஆகிய நாடுகளின் படைத்துறை அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.