ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா தொடர்பாக தெரிவித்த கருத்து மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளமை போன்ற விடயங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நடவடிக்கைகள் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த சிறிலங்காவின் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாகவே இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் செயற்பாடுகள் முற்றாக இல்லை என நாம் கூறியதும் கிடையாது. கூறப்போவதும் கிடையாது. அவர்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெறுகிறார்கள்.
நவநீதம்பிள்ளையின் பேச்சுக்களைப் பாருங்கள். இது எங்கிருந்தோ திடீரென வெளியிடப்பட்டதொன்றல்ல. ஒவ்வொரு காலகட்டத்தினதும் முக்கியத்துவத்துக்கு ஏற்றவாறு இது இருக்கின்றது. இது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியிலும், பூகோள ரீதியான உட்கட்டமைப்பிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். எனினும், சர்வதேச ரீதியான செயற்பாடுகள் நாம் கருத்திற் கொள்ளும் அளவுக்கு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன' என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் முக்கிய சினிமா நட்சத்திரங்கள் சிலர் கலந்து கொள்ளாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கெஹலிய ரம்புக்வெல, இதன் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
'இந் நடவடிக்கையின் பின்னணியில் புலம்பெயரந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் இருந்திருக்கவே செய்திருக்கின்றன. எனினும், ஒரு வாரத்துக்கு முன்னர் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மீண்டும் நீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சினை இருக்கும் நிலையில் இலங்கையின் நலனுக்கு உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது.
இந்த பிரச்சினையை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அத்துடன், சர்வதேச மட்டத்தில் இந்த பிரச்சினை இருப்பதாகவும், அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக்கிறார்.
இப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் சக்தி எமது நாட்டுக்கும், அரசுக்கும் உள்ளது' என அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியுள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.