உலக நாடுகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் காணப்படும் தொடர்பாடல் இடைவெளியே இர தரப்பினருக்குமான முரண்பாடுகளுக்கான காரணி என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவுக்கான ஜப்பானியத் தூதுவர் Kunio Takahashi, சிறிலங்காவுக்கும், உலக நாடுகளுக்கும் இடையில் உரிய முறையில் தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படாமையே, இவ்விரு தரப்பினருக்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வு இன்மைக்கான காரணம் எனக் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசானது தனது நிலைப்பாடு தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்பதே தமது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட நிலைமையும், தற்போது காணப்படுகின்ற நிலைமைகளும் முற்றாக வேறுபட்டது என கூறிய அவர், இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் தெரிவிக்கின்ற கருத்துக்களை சாதகமான முறையில் சிறிலங்கா அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகளில் இருந்து ஜப்பான் மீண்டும் தன்னை எவ்வாறு கட்டி எழுப்பியது என்பதை சிறிலங்கா அரசு கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் படிப்பினைகளை அனுபவங்களாகக் கொண்டு இலக்கை நோக்கி நகர்வதற்கான இதயசுத்தியுடன் கூடிய முயற்சிகளை சிறிலங்கா அரசு எடுக்க வேண்டும் எனவும், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசுக்கு ஜப்பான் தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.