Thursday, June 03, 2010

புலிகள் அழிக்கப்பட்டதுடன் கொழும்பின் மீதான இந்தியாவின் பிடி தளர்ந்து விட்டது: குல்தீப் நாயர்

சிறிலங்காவின் படை நடவடிக்கைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற இயக்கம் அழிக்கப்பட்டிருப்பது குறித்து புதுடில்லி மகிழ்ச்சி கொண்டிருக்கக்கூடும். ஆனால், விடுதலைப் புலிகளின் அழிவுடன் தென்னாசியப் பிராந்தியத்தில் கொழும்பின் மீதான இந்தியாவின் பிடியானது தளர்ந்துவிட்டதென்ற உணர்வு பரவலாகக் காணப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக இந்தியாவிடம் தொடர்ச்சியானதும், உறுதியானதுமான கொள்கை இல்லாததே இதற்குக் காரணமாகும். இலங்கையிலுள்ள நிலவரங்களின் அடிப்படையிலேயே அது தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன.

இலங்கை தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்த வேண்டுமென்ற தலைப்பில் குல்திப் நாயர் The Tribune எனும் ஊடகத்தில் எழுதிய செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக சமஷ்டி முறையை உள்வாங்குமாறும், அதிகாரத்தை பரவலாக்குமாறும் சிறிலங்கா அரசை புதுடில்லி வலியுறுத்தி வந்திருந்தது.

ஆனால், தற்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிகழ்ச்சிநிரல் குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக மாகாணங்களுக்கு சமஷ்டி முறைமையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா சமீபகாலமாகக் கொண்டிருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இவ்விரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் இணைந்திருப்பதைத் தவிர, வேறு தெரிவு இருக்க முடியாது என்பது உண்மையாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய உறுதிமொழி தொடர்பாக அவருக்கு அழுத்தம் கொடுக்க பிரதமர் மன்மோகன் தவறிவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இத்தகைய உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் அளித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்படுவதற்கு முன்னர் புதுடில்லி தலையீட்டை மேற்கொண்டிருக்க வேண்டும் என சிலர் விவாதிக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களை உள்வாங்கிக் கொள்ளுமாறு கொழும்புக்கு தெரிவிப்பதற்கான அரசியல் வெளியை இந்தியா கொண்டிருந்திருக்க முடியும் என்று அவர்கள் விவாதிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்காப் படையினருக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியமை தொடர்பாக அதிகார பூர்வமான செய்திகள் உள்ளன. விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்க கொழும்பு விரும்பியிருந்தது. அதனால் அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியாவின் எவ்வித நிபந்தனையையும் கொழும்பு ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருந்தது. ஆனால், இதற்கு முரண்பட்ட வகையில் இந்தியா கொழும்புக்கு நிபந்தனைகளின்றி ஆயுதங்களை வழங்கி வந்தது.

தமிழ் மக்களுக்கான இடத்தை வென்றெடுக்கும் இலக்கை புதுடில்லியானது கொண்டிருந்திருக்குமானால் நீண்டகாலத்திற்கு முன்பாகவே, அதாவது சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பதவிக் காலத்திலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும். ராஜீவ் காந்தி கப்பலின் மாலுமியாக இருக்கும் வரை அவரின் தலைமையில் தாங்கள் எதனையும் செய்ய முடியும் என ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான அதிகாரப் பகிர்விற்குப் பதிலீடாக நல்லிணக்கம் என்ற வார்த்தை ஏன் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஏனெனில், இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சீனாவின் முனைப்பு புதுடில்லியை அச்சம் கொள்ளச் செய்வதே காரணமாகும்.

திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொறுப்பேற்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவைச் சுற்றி வளைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை சீனா கடைப்பிடித்து வருகின்றது. நேபாளத்திலும் கூட அதிகளவு முதலீடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில், சீனாவின் இந்தக் கொள்கையைக் கண்டிப்பதற்குப் பதிலாக இலங்கையின் சமஷ்டி கட்டமைப்பு முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையை புதுடில்லி மேற்கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக மன்மோகன் சிங்கின் அரசாங்கத்திற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி இறுதிக் காலக்கெடுவைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அவர் தனது டில்லி விஜயத்தின் போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஏ.ராஜாவை பாதுகாப்பதற்கு மட்டுமே தனது ஆர்வத்தைச் செலுத்தியிருந்தார். 40 ஆயிரம் கோடி மோசடிக் குற்றச்சாட்டில் ராஜா சிக்கியிருந்தார். தமிழ் மக்கள் குறித்து கருணாநிதி கதைத்திருந்தாலும் கூட அதனை அவர் முழுமையாகச் செய்யவில்லை.

அதேசமயம், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக அதிகளவிலான செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ் மக்களின் உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன பற்றி அதிகளவு செய்திகள் வெளிவந்துள்ளன.

படுகொலைகள், சித்திரவதை, காணாமல்போதல், உணவு, நீர், மருந்து விநியோகமின்றி தடுத்து வைத்திருத்தல், உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் என்பன தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தது. சர்வதேச சட்ட முறைமையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஆட்லறி மற்றும் வெள்ளைப் பொஸ்பரஸ், கொத்தணிக் குண்டுகள் போன்ற சட்டவிரோத ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை சிறிலங்கா அமைத்துள்ளது. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதால் இந்த ஆணைக்குழுவானது சந்தேகக் கண்ணுடன் நோக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இராணுவ ரீதியில் தோற்கடித்திருக்கலாம், ஆனால், தமிழ் மக்களின் மனங்களில் உள்ள துன்ப உணர்வுகளை இன்னமும் இல்லாமல் செய்து விடவில்லை என்பதை அவர் உணர்ந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களின் மனதை வெற்றி கொள்ள அவர் எதனையாவது செய்யவில்லையாயின், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் மேலெழுந்துவிடக் கூடும்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை என்ன? இரு தசாப்தங்களாக கொழும்பை நம்பிக்கையூட்ட முயற்சித்துக் கொண்டிருந்த சமஷ்டி முறைமை மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்பவை தொடர்பாக எந்தப் பெறுபேறும் கிட்டவில்லை. இந் நிலையில், தற்போது புதுடில்லியின் நிகழ்ச்சிநிரல் என்ன?' இவ்வாறு தனது செய்திக் கட்டுரையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.