Thursday, June 03, 2010

களையிழந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா! - பெரும் கவலையில் கொழும்பு!!

சிறிலங்காவில் இன்று பெருமெடுப்புடன் ஆரம்பமாகியுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவை பெரும்பாலான இந்திய நட்சத்திரங்கள் புறக்கணித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மூடி மறைக்கும் நோக்குடனேயே , இவ் விழாவை சிறிலங்கா அரசு நடத்துவதாக தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், ஹிந்தி நடிகர்களான சல்மான் கான், விவேக் ஓபராய் போன்ற ஒருசில நடிகர்கள் மட்டுமே தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் எதிர்ப்பையும் மீறி இத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய திரைப்பட கழகத்தால் ஆண்டு தோறும் இத் திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்த விழா இவ்வாண்டு கொழும்பில் இன்று ஆரம்பமாகி உள்ளது.

இத் திரைப்பட விழாவை கொழும்பில் நடத்துவதற்கு இந்திய மற்றும் சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான வகையில் கொல்லப்பட்டதை மூடி மறைக்கும் நோக்குடனேயே சிறிலங்கா அரசு இவ் விழாவை நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

குறிப்பாக இத் திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ரஜனிகாந்த் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் போன்ற முன்னணி திரைக் கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் நடைப்பெற்றிருந்தன.

அத்துடன், இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் எந்தவொரு நடிகர்களின் திரைப்படங்களையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்திருந்தது.

இந் நிலையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை அடுத்து இந்திய முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், மூன்று நாள் நடைபெறும் இத் திரைப்படவிழா களையிழந்த நிலையில் கொழும்பில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இத் திரைப்பட விழாவின் இறுதி நாளில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு திரைப்பட விருதுகளை வழங்க உள்ளார்.

இவ் வேளையில் இத் திரைப்பட விழாவின் இறுதி நாளன்று இந்திய முன்னணி நடிகர் அமிதாப்பச்சனை கலந்து கொள்ள வைப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.