போர்க் குற்றங்களை மூடிமறைப்பதற்காக சிறிலங்கா அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.போர்க் குற்றவாளிகளான ராஜபக்ச சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க் குற்றச் சட்டம் தூங்கி இருக்க மாட்டாது. அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்ச சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸை வெளிநாடுகளுக்கு எல்லாம் அனுப்பி குற்றங்களை மறைக்க முயற்சி செய்து வருகிறது. இன்னொன்று, கலாசார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி அதன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்கிறது.
இரண்டாவது முயற்சிக்கான அடிப்படை தான், அனைத்துலகத் திரைப்பட விழா. அந்த விழாவுக்கு இந்திய அரசு துணை போவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. உலகம் கண்டிராத கொலைக்களப் பூமியில், உல்லாசமாகத் திரைப்பட விழா நடத்துவது எவ்வளவு பெரிய வக்கிரம். அதற்கு அமிதாப் பச்சன் போன்ற புகழ்பெற்ற இந்திய நடிகர்களை அழைத்திருக்கிறது இலங்கை அரசு.
தி.மு.கழக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
‘ஏ.ஆர்.ரகுமான் போன்ற தமிழர்கள் ஒஸ்கார் பரிசு வாங்கி வந்தால், அவரை இந்தியர் என்று சொல்லிக் கொண்டாடுகிறீர்கள். கன்னியாகுமரிக் கடற்கரையில் இந்தியக் குடிமக்களான மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கி விடுகிறீர்கள் ‘ என்றார்.
எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. ஆனால் இப்போது ஒரு சிறிய மாறுதல். முதலில், திரைப்பட விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் முதலான புகழ்பெற்ற நடிகர்கள், அவ்விழாவில் பங்கேற்கவே இல்லை. மும்பையில் உள்ள ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் நடிகர் அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு மனுக் கொடுத்து விடயங்களை விளக்கியமை அமிதாப்பின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம்.
அந்த வகையில் நாம் தமிழர் இயக்கப் பணி பாராட்டிற்குரியது. அதே போன்று, சென்னையில் மே 17 இயக்கத்தினரும் சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையைச் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு தமிழ் அமைப்பினர் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். திரை உலகினரின் இன உணர்வுக்கும், மனித நேயத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எனினும் விவேக் ஓபராய் போன்ற நடிகர்கள் சிலரின் மனித நேயமற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீஎல்.பீரிஸ் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, ஐ.நா.சபையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித் திருக்கிறார்.
‘இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் ஐ.நா. தலையிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்., ‘நாங்களே ஒரு விசாரணை வைத்து முடிவைச் சொல்கிறோம்’ என்றும் கூறியிருக்கிறார். குற்றவாளியே விசாரணைக் குழு அமைத்துக் கொள்ளும் ஒன்பதாவது உலக அதிசயம் இது தான்.
அவர் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். இந்நிலையில் ஜனநாயகத்திலும், சகோதரத்துவத்திலும், மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.
மிகக் கொடூரமான போர்க் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உலக நாடுகளும், ஐ.நா.சபையுயும் இடம் கொடுத்தவிடக் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்’ என பேராசியரியர் சுப வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.