Sunday, June 06, 2010

இந்தியா, இலங்கைக்கிடையில் ஐந்து ஒப்பந்தங்கள்! - மகிந்தாவின் விஜயத்தின் போது கைச்சாத்து!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடில்லிக்கான விஜயத்தின் போது ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் 11 ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஆயினும், இப் பேச்சுவார்த்தைகளின் போது ஐந்து ஒப்பந்தங்கள் தொடர்பாகவே இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஒத்துழைப்பு, கைதிகளை பரிமாறும் விவகாரம், குற்றவியில் விடயங்களில் சட்ட உதவி, கலாசார ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்திய உதவி ஆகிய இந்த ஐந்து விடயங்கள் தொடர்பிலான ஒப்பந்தங்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான ஏனைய ஆறு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்பில் மேலும் காலதாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சிறிலங்காத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அவரது பாரியார் ஷிராந்தி ரராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், திறைசேரியின் செயலாளர் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.