சிறிலங்காவின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே முரண்பாடுகள் முனைப்புப் பெற்றுள்ளன.
இந்த முரண்பாடுகளை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அரசியல் யாப்பில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் மாற்றுப் பரிந்துரைகள் கொண்ட வரைபொன்றை தயாரிக்கவுள்ளன.
இவ் விடயம் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசாஜக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளைக் கொண்ட கூட்டு இடதுசாரி முன்னணியின் பிரதிநிதிகள் சந்தித்து ஆராய்ந்து வருவதுடன், அது குறித்த தமது ஆலோசனைகளையும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கவுள்ளனர்.
இடதுசாரிக் கட்சிகளின் இந்த ஆலோசனைகள் அடங்கிய வரைபு கிடைக்கப் பெற்ற பின்னர் அது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.
இவ் விவாதத்தின் பின்னரே அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து இறுதி செய்யப்படவுள்ளதாக கூட்டு இடதுசாரி முன்னணியின் தலைவரும், சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, செனட் சபை மற்றும் மாகாண சபைக்குரிய பொலிஸ் அதிகாரம் போன்ற விடயங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் கூடிய கவனம் செலுத்துவதாக தெரிய வருகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.