இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாலஸ்தீன மற்றும் ஏனைய அரேபிய மக்களின் மனித உரிமைகளைப் பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறைகள் குறித்து விசாரணை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவுக்கு ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி பாலித்த கொஹன்ன தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விசாரணைக் குழு இம் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும், 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொண்டு இவ் விவகாரம் குறித்த விசாரணைகளில் ஈடுபடவுள்ளது.
இஸ்ரேலியப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் காஸாப் பிரதேசம், மேற்குப் பள்ளத்தாக்கு, கிழக்கு ஜெருசெலம் மற்றும் அரேபியர்கள் வாழும் சிரியாவின் பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இந்த விசேட ஆணைக்குழு 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சிறிலங்கா, மலேசியா மற்றும் செனிஹல் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவில், ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசியாவின் நிரந்திரப் பிரதிநிதி Hamidon Ali மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செனிஹலுக்கான பிரதிநிதி Momar Gueye ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இவ் விஜயத்தினை முடித்துக் கொண்ட பின்னர் தாம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைக் குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது.
இவ்வறிக்கையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாலஸ்தீன மற்றும் ஏனைய அரேபிய மக்களின் மனித உரிமைகளைப் பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறைகள் குறித்து கூறப்படவுள்ளதுடன், இப் பிரதேசங்களில் மனிதவுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கவுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் பிரதிநிதியை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாலஸ்தீன மற்றும் ஏனைய அரேபிய மக்களின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த அனுமதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் குறித்து பொங்கு தமிழ் கவலை தெரிவிக்கின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.