சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மறுநாள் 8ஆம் திகதி அவர் இந்தியாவுக்குச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கேற்ப சிறிலங்கா ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இப் பேச்சுவார்த்தை இடம்பெறுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப் பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஈரானில் நடைபெற்ற ஜி 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்தார்.
சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகளைத் தணிக்கும் வகையில் இத்தகைய முயற்சி ஒன்றின் அவசியம் குறித்து இந்தியத் தரப்பால் கொழும்புக்கு எடுத்துக் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது.
இதனடிப்படையிலேயே இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக அவசரமாக இப் பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எதிர்ப்புக்களைத் தணிக்கவும் இந்தப் பேச்சுவார்த்தை உதவக்கூடும் என கொழும்புக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும் அத்தகவல் மேலும் கூறுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.