இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கையளித்துள்ள வருடாந்த அறிக்கையிலேயே இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் இறுதிக் காலப்பகுதியில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், இப் போரின்போது மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையில், இச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்காவில் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும், நீதியான முறையிலும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் இலகுவாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர்.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சர்வதேச நியமங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் நீதியான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் கண்டறிப்பட வேண்டியதும், உரிய பரிந்துரைகளை முன்வைக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும். இதற்காக சர்வதேச சமூகம் உரத்துக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என பிலிப் அல்ஸ்ரன் தனது வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தார்.
இச் செவ்வியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பிலிப் அல்ஸ்டன் ஜெனீவாவிலுள்ள சிறிலங்காவின் தூதுவருக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையில் மனிதவுரிமை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாக கடமையாற்றும் திரு பிலிப் அல்ஸ்ரன் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.