சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், தொடரூந்து மறியல், உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டத்தின் போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, இயக்குனர்கள் சீமான், டி.ராஜேந்தர் உட்பட பலர் தமிழ்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்தும், அவரை வரவேற்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.
இப் போராட்டங்களுக்கு தமிழக காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அத் தடையையும் மீறி தமிகமெங்கும் இன்று காலை 10 மணியிலிருந்து தொடரூந்து மறியல், உருவப்பொம்மை எரிப்பு மற்றும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மயிலாப்பூரில்; நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, நடராஜன், நடிகர் டி.ராஜேந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய வைகோ, 'ஈழத்தமிழர்கள் நாதியற்றவர்களா? மாவீரன் பிரபாகரனைப் பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி வழங்கவில்லை. ஆனால் ராஜபக்சவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமையிலும் கொடுமை. ஏன் இந்த இனத் துரோகம்?'' என கேள்வி எழுப்பினார்.
சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மையை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தியதை அடுத்து 13 தொண்டர்கள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தேனியிலும்; உருவ பொம்மையை எரித்த தமிழ் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், நாமக்கல்லில் பொலிஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, கோவையில் தொடரூந்து மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்து, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது எனக் கோரி இப் போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, சிவசேனா, பாரதீய ஜனதாக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி போன்ற கட்சிகள் மற்றும் நாம் தமிழர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் இப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான எம் தமிழக உறவுகளும் கலந்து கொண்டு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.