Tuesday, June 08, 2010

மேற்குலக நாடுகளும் அபிவிருத்திக்கு உதவத் தயாராம்! - மகிந்தா

இந்தியா, சீனா போன்ற நாடுகள் மட்டுமன்றி மேற்குலக நாடுகளும் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு நடடிவக்கைகளுக்கு உதவ இணக்கம் தெரிவித்திருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாhளுமன்றத்திற்கு பிரவேசித்து 40 வருடப் பூர்த்தியை முன்னிட்டும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளும் தரப்பின் வெற்றிக்காக உழைத்தவர்களை கௌரவிக்கும் முகமாகவும் நேற்று அலரிமாளிகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து கூறியுள்ளார். இந் நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டாம் என சிலர் தடையேற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால் இத் தடைகளை மீறி ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் மற்றும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மட்டுமன்றி மேற்குலக நாடுகளும் எமக்கு உதவ இணக்கம் தெரிவித்துள்ளன.

நாட்டைப் பிளவுபடுத்த கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கவாத நடவடிக்கைகளைத் தோற்கடிக்க எம்மால் தலைமைத்துவம் வழங்க முடிந்தது. நாம் இப்போது நாட்டை விடுவித்துள்ளோம்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என உடைந்த உள்ளங்களை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அது மட்டுமல்லாது பொருளாதார அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் என மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

நாம் கடந்த காலங்களில் யுத்தம் மட்டும் செய்யாது அதற்கு சமாந்தரமாக உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அடித்தளங்களை அமைத்தே வந்துள்ளோம். ஒரே நேரத்தில் 5 துறைமுகங்களை நிர்மாணிக்கும் யுகம் இது. நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகிறோம்.

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள அமைச்சர்களில் பலரும் தோல்வி எனும் அனுபவத்தைக் கண்டிருக்கவே மாட்டார்கள். எனினும் எமது இந்த 40 வருட அனுபவத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறோம். சிறைக்கும் சென்றிருக்கிறோம். அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவே எமக்கு இந்த நிலைமைகள் ஏற்பட்டன.

அலுவலகம் உடைப்பு, வீடு எரிப்பு, துப்பாக்கிச்சூடு என முள் நிறைந்த பாதையூடான அனுபவங்களை சந்தித்தே நாம் கட்சியை கட்டி எழுப்பினோம். இவற்றை புரிந்து உணர்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கிறது. வரலாற்றினூடாக பாடம் கற்றுக் கொண்டு கட்சியை பலப்படுத்தி முன்செல்ல வேண்டியுள்ளது. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.