Sunday, June 13, 2010

புலிகள் கேட்டதும் மகிந்த சொன்னதும்: தமிழ்க்கூட்டமைப்பு புரிந்து கொண்டதா?

“விடுதலைப் புலிகள் கேட்டதையெல்லாம் நீங்களும் வந்து என்னிடம் கேட்கக் கூடாது' இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறப்பட்ட முக்கியமான விடயம். பொதுத்தேர்தல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இந்தியா செல்வதற்கு முதல்நாள் அவசர அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்தியா என்ன கூறப்போகிறது என்பதை உணர்ந்தே இந்தியப் பயணத்துக்கு முன்னர் கூட்டமைப்பை அழைத்துப் பேசியிருந்தார் அவர்.

இதன் பின்னர், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களைத் தொடங்கிவிட்டோம் என்று அவர் இந்தியப் பிரதமருக்குக் கூறி சமாளித்து விட்டார்.

இந்தச் சொல்லுக்காகத் தான் கடந்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துப் பேசியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ. இல்லையேல் கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதற்கு இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்கத் தேவையில்லை.
கடந்த திங்களன்று நடந்த இந்தச் சந்திப்பின்போது புலிகள் கேட்டதையெல்லாம் என்னிடம் நீங்கள் கேட்கக்கூடாது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்தின் அடிப்படை ஆழம் என்ன என்று அறிவது முக்கியமானது.

அவர் கூறியது, தனிநாடு கேட்கக் கூடாது என்பதையா? அல்லது அதற்கும் கீழான சுயாட்சி, சமஷ்டி, ஆகியவற்றையா அல்லது அதற்கும் கீழான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகியவற்றையா?

புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நடத்தினார்களே தவிர ஒருபோதும் தனிநாடு அமைத்துத் தரும்படியோ நாட்டைப் பிரித்துக் கொடுக்கும்படியோ எந்தவொரு பேச்சுக்களிலும் கோரவில்லை. ஜே.ஆர் அரசாங்கம் தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வரையான எந்தக் காலத்திலும் புலிகள் அப்படியான பேச்சுக்களை நடத்தவும் இல்லை, இதுபற்றிப் பேசுவதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கவும் இல்லை.
எனவே, புலிகள் கேட்டதை நீங்களும் கேட்கக்கூடாது என்று அவர் கூறியது நிச்சயம் தனிநாடாக இருக்க முடியாது.
ஆனால், புலிகள் கேட்டதை நாங்கள் கேட்க வரவில்லை என்று கூறி விட்டு வந்துள்ளனர் கூட்டமைப்பு எம்.பிக்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு கேட்கவில்லை என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றாகவே தெரியும்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது தனிநாடு பற்றி பிரச்சினை இல்லை.
அதையிட்டு அவர் கவலை கொள்ளவும் இல்லை.

தனிநாட்டுக்கான போராட்டம், புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடன் முடிந்து விட்டதாகவே அரசாங்கம் கருதுகிறது.

இப்போதைய நிலையில் அதுதான் உண்மையாகவும் இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதற்கடுத்துள்ள பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டி, சுயாட்சி போன்ற விடயங்கள்தான்.
இவற்றைத் தோற்கடிப்பது தான் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது இருக்கின்ற பிரச்சினை. ஆனால் இதற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு, கூட்டமைப்பைத் தவிர யாரும் இல்லை என்பது அவருக்குள்ள பெரிய நிம்மதி.
தமிழ்மக்களுக்கு சமஷ்டித் தீர்வை வழங்குமாறு அல்லது சுயாட்சியை வழங்குமாறு கோருவதற்கு உலகில் யாரும் கிடையாது.

எனவே, இப்போது அரசுக்கு நெருக்கடி அதிகம் கொடுக்கும் பிரச்சினை வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் தான்.

மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான ஒரு அதிகாரப்பகிர்வையே நடைறைப்படுத்தப் போகிறார்.

அதற்குத் தான் இந்தியாவிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது பிக்கப்பட்டு விட்டன. இந்த இணைப்பு விவகாரம் அரசியல் தீர்வில் முக்கியமானதொன்றாக இருக்கப் போகிறது.
வடக்கு, கிழக்கு இணைப்பு. பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களைக் கொடுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இல்லை.
புலிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு, மற்றும் மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ஏற்கனவே அரசுடன் பேசியுள்ளனர்.
எனவே, மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூறியது வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றியதாகவே இருக்க முடியும்.
இதையும் விட்டு விட்டு வாருங்கள் பேசலாம், என்பதே மஹிந்தவின் நிலைப்பாடு போலுள்ளது.

தனிநாடு என்ற கோக்கையில் இருந்து கீழ் இறங்கி தமிழ் மக்கள் இன்று வெறுமனே வடக்கு, கிழக்கு இணைப்புக்கான போராட்டத்தை நடத்துகின்ற அளவுக்குப் போயிருக்கிறார்கள்.

இது தமிழன் அரசியல் உரிமைப் போராட்டம் பின்நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் புலப்படுத்துகிறது. முன்னோக் முகிய பாய்ச்சலாக இருந்த தமிழன் அரசியல் போராட்டங்கள் இப்போது பின்நோக்கித் திரும்பியதற்குக் காரணம் ஆயுதப் போராட்டத்தில் புலிகள் சந்தித்த தோல்விதான்.

தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு புலிகளுடன் பேசியதும் இதே அரசு தான். ஆனால், இப்போது புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அல்ல என்று தூக்கிப் போட்டிருக்கிறது.

அப்போது புலிகள் ஆயுதங்களுடன் பலமாக இருந்ததால் அவர்களின் கோரிக்கைகளை தமிழ்மக்களின் சார்பானது என்று ஏற்றுக் கொண்டது அரசாங்கம்.

ஆனால், இப்போது பலமற்றுப் போனதால் புலிகளின் கோரிக்கை வேறு தமிழன் விருப்பங்கள் வேறு என்று தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

அதைவிட, புலிகள் கேட்டதையெல்லாம் நீங்களும் கேட்கக்கூடாது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியதன் மற்றொரு பரிமாணத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

அவர்கள் ஆயுதங்களுடன் பலமாக இருந்து கேட்டதையெல்லாம். ஆயுத பலமில்லாதிருக்கும் நீங்கள் கேட்கக்கூடாது. கேட்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடு.

மொத்தத்தில் இலங்கை அரசு, புலிகள் கேட்டதையும் கொடுக்கவில்லை, கூட்டமைப்பு கேட்பதையும் கொடுக்கப் போவதில்லை.

தனிநாடு, சமஷ்டி, சுயாட்சி, வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற எதுவுமேயில்லாத ஒரு வெற்று அரசியல்தீர்வை உருவாக்கவே இலங்கை அரசு முனைகிறது.

அதில் பங்காளியாக கூட்டமைப்பைச் சேர்த்துக் கொள்வதே மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம்.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது? எப்படி அவரைக் கையாளப் போகிறது?


- ஹரிகரன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.