வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மிகப் பெரியதொரு படுகொலை நிகழ்த்தப்பட்டதாக இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப் போர் நிறைவுற்று ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பலருக்குத் தெரியாது எனவும், எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இம் மருத்துவர் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
வன்னியில் போர் இடம்பெற்ற இறுதிக் காலப் பகுதியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இந்திய மருத்துவக் குழுவொன்று அங்கு சென்று யூன் மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாதம் வரை சிகிச்சை அளித்திருந்தது. இக் குழுவில் அங்கம் வகித்த மருத்துவர் ஒருவரே இவ்வாறு ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
தாங்கள் முகாமுக்கு மருத்துவ சேவைகளை வழங்கச் சென்ற போது அங்கு கண்ட காட்சிகளை எதிர்பார்த்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'நாங்கள் அங்கு கண்ட காட்சிகள் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இப் போரில் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்பது தெட்டத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது.
ஷெல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களால் காயப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களுக்கு தினமும் நாங்கள் மருத்துவம் செய்தோம். இவர்களில் 80 சதவீததத்திற்கு மேற்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ இப் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
கணவன்மாரை இழந்தோர், பெற்றோர்களை இழந்தோர் என கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் நடைபெற்ற அவலம் மிகப் பெரியதாகும்.
சிறிலங்கா அரசால் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் போர் நடைபெற்றது.
வவுனியா தடுப்பு முகாமில் மட்டும் தாம் 40,000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கியிருந்தோம். இவர்களில் சுமார் 10,000 சிறுவர்கள் காயங்கள் மற்றும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 80 சாவீதமான சிறுவர்கள் அரைப் பட்டினியுடன் இருந்தனர்' என்று இவ் வைத்தியர் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
வன்னிப் போரில் பொது மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்துக்கு தொடர்ச்சியாக கூறி வருகின்ற நிலையில், இம் மருத்துவரின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியாகக் கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரப் படி கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் 7,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத் தொகை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந் நிலையில், இப் போரில் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவர் கோர்டன் வைஸ் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இறுதி வரை இருந்தோரின் தகவல்களின் படி சுமார் 80,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.