சிறிலங்கா அரசுக்கு எதிராக இந்தியா கடும்போக்கான நிலைப்பாட்டை எடுக்குமேயானால், அரசுக்கு உதவ சர்வதேச நாடுகள் எதுவுமே முன்வரப் போவதில்லை என அரசியல் ஆய்வாளர் டயன் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டு வரும் சீன மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முனைப்பான ஈடுபாடு குறித்து லக்பிம எனும் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பகையான போக்கைக் கடைப்பிடித்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசால் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் அவர் இச் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை சரியான முறையில் பேணியதாலேயே விடுதலைப் புலிகளுடனான போரில் எம்மால் வெற்றி பெற முடிந்தது.
மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தும் படி அழுத்தம் கொடுத்திருந்த வேளையில், இந்தியா எம்மோடு ஒத்துழைத்திருக்காது விட்டால் இப் போரில் எம்மால் வெற்றி கொள்ள முடியாது போயிருக்கலாம்.
எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என ஒரு கூற்று உண்டு. இவ் வகையில் இந்தியாவின் ஆதரவுக்கு சிறிலங்கா அரசு பிரதியுபகாரம் செய்ய வேண்டியுள்ளது.
இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் எமக்குத் தேவை என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடனான போரில் எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் சர்வதேச ரீதியாக எமக்கு எதிராக சில நாடுகள்; பனிப்போரில் ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில், எமக்கு எதிரான நாடுகளின் அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கோ அல்லது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செல்வாக்கினால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை வெற்றி கொள்வதற்கோ எமக்கு இந்தியாவின் ஆதரவு தேவை.
அமெரிக்காவை எதிர்கொள்வதற்கு இந்தியா தான் எமது ஆயுதம். சிறிலங்கா அரசுக்கு ஆழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என புதுடில்லியை தமிழ் நாடு, இந்தியாவின் பொது அமைப்புக்கள் மற்றும் இந்தியாவின் நண்பர்களான சில மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியா எமக்கு ஆதரவு வழங்காது விட்டால் அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறுவதும் கடினமாக இருக்கும். இந்தியா தமிழ் நாடு மற்றும் கேரளாப் பகுதிகளின் கடலோரத்தைப் பாவிக்க விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் அனுமதித்தால் நாம் மீண்டும் பாரிய பாதுகாப்புப் பிரச்சினையை தொடர்ந்து எதிர்நோக்குவோம்.
இந்தியாவில் பல கோடி தமிழ் மக்கள் இருப்பதால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
இந் நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மிகக் குறைந்த விலை கொடுக்கக்கூடிய தீர்வான 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும்.
13வது திருத்தச் சட்டத்தை தற்போது நாம் நடைமுறைக்கு கொண்டு வராவிட்டால் எமது இராணுவ வெற்றியை முடக்குவதோடு, இன்னும் சில ஆண்டுகளில் நாம் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என அவர் இவ்வூடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதியாக முன்னர் கடமையாற்றிய டயன் ஜயதிலக்க, சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழக தென்னாசிய கற்கை நெறிகளுக்கான நிலையத்தின் ஆய்வாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.