Sunday, June 13, 2010

வடக்கு, கிழக்கு இணைப்பில்லாமல் 13வது திருத்தம் சாத்தியமில்லை! - ஏசியா டைம்ஸ்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசை இந்தியா போதியளவு வலியுறுத்தி வருவதாக எவருமே கருதவில்லை என ஏசியா டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் பிடியிலிருந்து மகிந்த ராஜபக்ச நெளிந்து ஊர்ந்து செல்கிறார் என்ற தலைப்பில் ஏசியா டைம்ஸ் இணையத்தளத்தில் சுதா ராமச்சந்திரன் எழுதிய கட்டுரையிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மிக நீண்ட இக் கட்டுரையில் இனப்பிரச்சினை குறித்து அவர் எழுதிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக உண்மையிலேயே ஆர்வம் கொண்டதாக இந்தியா இருப்பதாகத் தோன்றவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு காலத்திற்குக் காலம் இந்தியா கொழும்புக்கு அழைப்பு விடுக்கின்ற போதிலும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சாந்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இதனைச் செய்வதாகத் தென்படுகிறது.

ஏனைய விடயங்களில் தனது கோரிக்கைகளில் இணங்கிக் கொள்வதற்காக சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணுமாறு அழுத்தம் கொடுப்பதிலும் பார்க்க, ஏனைய விவகாரங்களுக்கு இந்தியா அழுத்தத்தைக் கொடுக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

புதுடில்லியில் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பான உறுதிப்பாடு குறித்து மகிந்த ராஜபக்ச பேசியுள்ளார். ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வட, கிழக்கு மாகாணங்களுக்கு அர்த்தபுஸ்;டியான அதிகாரப் பகிர்வின் தேவை குறித்து வலியுறுத்தியிருக்கிறார்.

இன நெருக்கடிக்குத் தீர்வாக 13வது திருத்தமும், அதற்கு அப்பாலும் என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் 13வது திருத்தம் அதிகாரப் பகிர்வாகக் கொண்டு வரப்பட்டதாகும். இப்போது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லுமாறு புதுடில்லி கொழும்பைக் கோருகிறது.

ஆனால், இந்தத் தீர்வானது செயற்பட முடியாத தன்மையுடையதாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். வட, கிழக்கு மாகாணம் ஒரே அலகாக இனிமேலும் இருக்கப் போவதில்லை. இரு வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் இணைத்துக் கொள்வதற்கான சாத்தியப்பாடு காணப்படவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கப்பாட்டை முன்னெடுப்பதற்கான அரசியல் விருப்பத்தை மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டத்தில் ராஜபக்சவும், சிங்களவர்கள் பலரும் வெளிநாட்டு ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதில் விருப்பத்தைக் காண்பிக்கவில்லை.

சிறிலங்காவின் மனித உரிமைகள் துஸ்பிரயோகம் தொடர்பான சர்வதேச விமர்சனங்களுக்கு அவர்கள் அளிக்கும் பதில் மிகவும் கடுமையான தன்மை கொண்டதாக காணப்படுகிறது.

இனநெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்து வெளிமட்ட சிபாரிசுகளை உள்வாங்கிக் கொள்வதில் அவர்கள் விருப்பமற்றவர்களாக உள்ளனர்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் மோதல் முடிவடைந்து விட்டதாக இலங்கையிலுள்ள பலரும் நம்புகின்றனர். தீர்வு காண்பதற்கு எதுவும் இல்லை என்ற தன்மையே அங்கு காணப்படுகிறது' என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.