கிளிநொச்சி நகரில் இருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள கணேசபுரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மலக்குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டாரத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர்.
உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டன.
அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சிவகுமார் மற்றும் வவுனியா பொதுமருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோரின் முன்னிலையில் இந்த சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சடலங்களைப் பார்வையிட்ட நீதவான், மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களில் மூன்று கறுப்பு பொலித்தீனால் சுற்றப்பட்டிருந்தன. ஏனைய இரண்டு சடலங்களும் வெள்ளை பொலித்தீன் உறைகளால் சுற்றப்பட்டிருந்தன. இதில் கறுப்பு பொலித்தீனால் சுற்றப்பட்ட சடலங்கள் மிகவும் பழுதடைந்திருந்ததாக ஸ்தலத்தின் பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எனினும் வெள்ளை பொலித்தீனால் சுற்றப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மரண விசாரணைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த சடலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்த ஆடைகள் காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாரி போன்ற ஆடை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சடலங்கள் ஆண்களுடையதா அல்லது பெண்களுடையதா என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை சடலங்கள் யாவும் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த மலக்குழியில் போடப்பட்டிருக்கலாம் என்றும் அவை விடுதலைப்புலிகளின் சடலங்களாக இருக்கலாம் என்றும் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட நிலையிலேயே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரச தலைவர் இந்திய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தாங்கள் பொதுமக்கள் யாரையும் படுகொலை செய்யவில்லை என தெரிவித்துள்ள நிலையில் கிளிநொச்சி கணேசபுரத்தில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.











0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.