Sunday, June 13, 2010

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயங்க வைக்க அவுஸ்திரேலியா ஆர்வம்!

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீளவியங்க வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாக சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் Kathy Klugman விருப்பம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று சந்தித்த போதே, இவர் அவுஸ்திரேலியாவின் விருப்பம் குறித்து கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் தற்போது காணப்படும் வர்த்தக ரீதியிலான செயற்பாடுகளை மேம்;படுத்திக் கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுமதி, இறக்குமதித் துறையை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது குறித்தும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில், சக்தி வலு மற்றும் கல்வித் துறைகளில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் அவுஸ்திரேலியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில், இலங்கையில் தற்போது காணப்படும் புதிய முதலீடுகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடக்கு கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்கான சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுவதாக அவுஸ்திரேலியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை மேற்கொள்வது குறித்து முனைப்புக் காட்டுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவுஸ்திரேலியத் தூதுவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.