Sunday, May 16, 2010

பாதுகாப்பு அமைச்சுடனான சந்திப்பு முடிந்து பல்கலை மாணவர்கள் யாழ் திரும்பியுள்ளனர் - கே.பீயும் சந்திப்பில் கலந்து கொண்டார்?

ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு முடிவடைந்துள்ளதாக புலனாய்வு செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் புலிகளின் முன்னைநாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பீ.யும் கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது. சந்திப்பின் இறுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி பல்கலைக்கழக மாணவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் புலனாய்வுப் பிரிவின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டுள்ளனரா?

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரின் பெற்றோரின் உதவியுடன் பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தமது ஆளுமைக்கு உட்படுத்த இலங்கை புலனாய்வுத் துறை முழுமூச்சாக தொழிற்படுவதாக கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் இந்த அரச அதிகாரிகளின் பிள்ளைகள் சிலர் யாழ் பல்கலைக்கழக மற்றும் தெற்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்றனர். இவர்களின் உதவியுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வளைத்துப் போடுவதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தியாளர் கூறுகிறார். இந்த முயற்சிகளுக்கு வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு பின்னர் படையினரால் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட வைத்திய கலாநிதி ஒருவரும் முக்கிய பங்காற்றுவதாக தெரியவருகிறது.

இதன் முதற்கட்டமாக கப்பில் தேவ என்ற பெயரை உடைய இலங்கைப் படையினரின் புலனாய்வு அதிகாரி ஒருவர் சில மாணவர்களுடன் இரகசிய சந்திப்பை நடத்தி உள்ளதாக கொழும்பு புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் ஒரு சில நாட்களில் இரண்டாம் கட்டத்திற்கு உரிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள புலனாய்வுச் செய்தியாளர் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பீயும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தனக்கு வேறு சில தரப்பினர் கூறியுள்ள போதும் அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

1980களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் ஏனைய பல மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கும் முக்கிய தளமாக தொழிற்பட்டு வரும் பல்கலைக்கழக சமூகத்தை தமது பக்கம் வென்றெடுத்து இனிவரும் காலங்களில் மக்களின் உரிமைப் பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்கும் ஒரு கட்டமைப்பாக பல்கலைக்கழகம் தொழிற்படாது இருப்பதற்கான உறுதியான கட்டுமாணத்தை ஏற்படுத்துவதே இலங்கைப் புலனாய்வுத் துறையின் நோக்கம் என படைத்தரப்போடு தொடர்புடைய புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எனினும் இது குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தோடு நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் பலரிடம் கேட்ட போது தமக்கு இதுபற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்கள்.

இருந்தபோதும் கடந்த 3 தசாப்த்தத்திற்கும் மேலாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு பலம் சேர்த்த சமூகத்தின் முக்கிய பொதுக் கட்டமைப்புகளை அரசாங்கப் பக்கத்திற்கு வென்றெடுப்பது அல்லது அவ்வமைப்புக்களை மௌனிக்க வைப்பது என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் புலனாய்வுத் துறையின் பல பிரிவுகள் தமது தொழிற்பாடுகளை குடாநாட்டில் ஆரம்பித்திருப்பதாக புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.