Sunday, May 16, 2010

ஈழத்தமிழ் மக்கள் தொடர்பான கொள்கையை மீளாய்வு செய்யவேண்டிய நிலையில் இந்தியா

நான்காவது ஈழப்போர் நிறைவடைந்து இந்த வாரத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. 2009 ஆம் ஆண்டு 18 ஆம் நாள் திங்கட்கிழமை போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.

இந்த போரில் பொருமளவானோர் கொல்லப்பட்டதுடன், வன்னிப் பகுதியும் ஒரு முழுமையான அழிவை சந்தித்திருந்தது. ஏறத்தாள 160,000 வீடுகள் வன்னிப்பகுதியில் முழுமையாக அழிவைச்சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது. 400,000 மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் 160,000 வீடுகள் அழிவைச்சந்தித்திருப்பது என்பது அந்த பிரதேசம் முழுமையான அழிவை சந்திருப்பதையே காட்டுகின்றது.

இந்த நிலையில் வன்னியில் நடைபெற்ற போரின் வெற்றியை சிறீலங்கா அரசு கொண்டாடி வருகின்றது. ஆனால் மறுவளமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் முகமாக வடக்கு – கிழக்கில் அமைதியான நிகழ்வுகளும், அனைத்துலக ரீதியாக புலம்பெயர் தமிழ் சமூகம் பெரும் எடுப்பில் விழிப்பு நிகழுவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னினயில் நடைபெற்ற போரில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவுக்கான முன்னாள் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி தெரிவித்திருந்தார். ஆனால் அரசு அதனை மறுத்திருந்தது. எனினும் போர் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் கூட அங்கு கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிக்கைகளை அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ வெளியிடவில்லை.

மேலும், சிறிலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைளை மேற்கொள்வதற்கு ஏதுவான ஆலோசனைக்குழு ஒன்றை அமைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஐ.நாவின் செயற்திறன் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை உலக அரங்கில் தனது நம்பிக்கையை முற்று முழுதாக இழந்துள்ள நிலையை அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நகர்வை நிறுத்துவதற்கு சிறீலங்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஐ.நாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகன்னா தொடர் முயற்சிகளை மேற்கொண்டதுடன், சிறீலங்காவின் நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீசும் அண்மையில் நியூயோர்க் சென்று பான் கீ மூனுடன் பிரத்தியோக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் மூலம் ஐ.நாவின் நகர்வை தாமதப்படுத்திய சிறிலங்கா அரசு அதனை திசைதிருப்பும் முயற்சியாக சிறிலங்காவில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் இந்த அறிவித்தால் காலத்தை இழுத்தடித்த ஐ.நாவுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது.

சிறிலங்காவின் கருத்தை வரவேற்றுள்ள அமெரிக்கா மறுவளமாக விசாரணைக்குழு எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சூசன் ரைஸ் இது தொடர்பில் தெரிவிக்கும் போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை விசாரணைக்குழு கொண்டிருப்பதுடன், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், சாட்சியமளிப்பவர்களுக்கும் போதுமான பாதுகாப்புக்கள் வழங்கப்படுவதுடன், ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் பரிந்துரைகளுக்கு சிறிலங்கா அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆணைக்குழு அனைத்துலகத்தின் தராதரத்திற்கு இணையாக இருக்கும் எனவும் தாம் நம்புவதாக என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவித்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை தற்போது சிறிலங்காவின் ஆணைக்குழுவின் முடிவுக்காக காத்திருப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சிறீலங்கா அரசின் விசாரணைக்குழு என்பது அதிகாரங்கள் அற்ற ஒரு ஆலோசனைக்குழு எனவும், அதனால் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவில் பெருமளவான விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை எவையும் தமது முடிவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என கொழும்பை தளமாக கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பை சேர்ந்த பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் தற்போதைய நகர்வுகளுக்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. விசாரணைக்குழுவை அமைப்பதன் மூலம் ஐ.நாவின் நகர்வை பின்தள்ளுவது, மேற்குலகத்திற்கு சில நம்பிக்கைகளை வரவழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகளையும், ஏனைய நிதி உதவிகளையும் பெற்றுக்கொள்வது போன்றன முக்கியமானவை.
மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ள தவறினால் வருடத்திற்கு 150 மில்லியன் டொலர்களை வருமானமாக பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழப்பதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அதன் உற்பத்தி துறையும் பாதிக்கப்படலாம். சிறிலங்காவின் உற்பத்திபொருட்களில் அரை பங்கு ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால் மேற்குலகம் தொடர்ந்து ஏமறப்போவதில்லை என்பதையே சூசன் ரைஸின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பது மட்டுமல்லாது, சிறீலங்காவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இந்தியாவையும் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.

சிறீலங்காவில் ஏற்பட்டுவரும் படை பல அதிகரிப்புக்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது என இந்திய அமைதிப்படை காலத்தில் அதன் நடவடிக்கைகளுக்கான புலனாய்வுப் பிரிவு கட்டளை தளபதியாக பணியாற்றிய கேணல் கரிகரன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தின் படை பல அதிகரிப்பு என்பது விரலுக்கு மிஞ்சிய வீக்கம் தான். ஆனால் அதன் படைபல அதிகாரிப்புக்கு ஏற்ப ஆயுதவளங்களில் இந்தியாவை அச்சுறுத்தும் நிலைக்கு சிறிலங்கா படையினர் செல்லமுடியாது.

அதாவது ஓரு டசின் போர் விமானங்களை கொண்டுள்ள சிறீலங்கா நுற்றுக்கணக்கான போர் விமானங்களை கொண்டுள்ள இந்தியாவை மிரட்ட முடியாது. அதனைபோலவே ஏனைய ஆயுதங்களின் விகிதாசாரங்களும் அமைந்துள்ளன. எனினும் சிறீலங்கா படையினரை கண்டு இந்தியா ஏன் அஞ்சுகிறது?

சிறிலங்கா இராணுவம் ஆட்தொகையில் சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி நின்றாலும் அதனை வழிநடத்தப்பபோவது சீனாவே என்பதை ஆமை வேகத்தில் இந்தியா தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.

சிறிலங்காவின் முப்படையினரின் தொகை ஏறத்தாள 450,000 ஆக உயர்ந்துள்ளது. இதில் இராணுவத்தின் தொகை 300,000 ஆகும். இந்திய இராணுவத்துடன் ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்காகும். நூறுகோடி மக்களை கொண்ட இந்தியாவின் இரணுவபலம் 12 இலட்சமாக உள்ள நிலையில் இரண்டு கோடி மக்களை கொண்ட சிறிலங்காவின் இராணுவம் 300,000 ஆக உள்ளது மிகப்பெரும் அதிகாரிப்பாகும்.

மேலும் சீனா அமைத்துவரும் கூட்டணி நாடுகளுக்குள் சிறீலங்காவும் உள்வாங்கப்பட்டுள்ளதால் சீனாவின் கூட்டணி இராணுவமாக அதாவது மேகுலகத்தின் நேட்டோ படையினரை போல அல்லது அமெரிக்கா அமைத்து போரிடும் கூட்டணி படையினரை போல வருங்காலத்தில் சிறீலங்கா இராணுவமும் செயற்படலாம் என்ற அச்சங்கள் இந்தியாவுக்கு உண்டு.

சீனாவின் தொழில்நுட்பம், ஆயுதங்கள் என சிறிலங்கா இராணுவத்தின் வளங்கள் அதிகரித்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகலாம் என இந்தியா கருதுகின்றது. ஒரு சில இலட்சம் படையினரை கொண்டுள்ள இஸ்ரேல் அமெரிக்காவின் படைபல உதவியுடன் பலகோடி மக்களை கொண்ட அரபு நாடுகளை மிரட்டுவது போல இதனை கருதலாம்.

சிறீலங்காவில் நடைபெற்ற போரை இந்தியா வழிநடத்திய போதும்;, சீனாவே படைத்துறை உதவிகளையும், நிதி உதவிகளையும் சிறீலங்கா அரசிற்கு பெருமளவில் வழங்கியிருந்தது. எஃப்-7 ரக தாக்குதல் விமானங்கள், ஜேவை-11 ரக முப்பரிமாண ராடார்கள், பீரங்கிகள் உட்பட பெருமளவான படைத்துறை உபகரணங்களை சீனா வழங்கியிருந்தது.

சீனாவினதும் சிறீலங்காவினதும் இந்த புதிய பிணைப்புக்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் சாவாலாக உருவெடுத்துள்ளது. “அமெரிக்கா தூங்கும் சமயம் பார்த்து சீனா ஆசிய பிராந்தியத்தில் தனக்கென பல நண்பர்களை உருவாக்கி வருகின்றது“ என அமெரிக்காவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ரெய்லர் மார்ஷல் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

போர் மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா தனது காலத்தை செலவிட்ட போது சீனா 21 ஆவது நூற்றாண்டின் புதிய சக்தியாக கிழக்கு ஆசியாவில் தன்னை கட்டியெழுப்பி வந்திருந்தது. அமெரிக்காவின் நீண்டகால நண்பர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

ஈரானிடம் இருந்து தனது எரிபொருள் தேவையில் 15 விகிதங்களை பெற்றுவரும் சீனா அதற்கு ஆதரவாக குரல்கொடுத்தும் வருகின்றது. கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பிரசன்னம் யப்பான், தாய்வான் மற்றும் தென்கொரியாவை முதன்மைப்படுத்தியே அமைந்துள்ளது. சீனா அமெரிக்காவுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து வருகின்ற போதும், சூடான், மியான்மார் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தையும், இரஜதந்திர உறவுகளையும் சீனா வலுவாக பேணிவருவது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை தோற்றுவித்துள்ளது.

தற்போது இந்த கூட்டணியில் சிறீலங்காவும் இணைந்துள்ளது. ஆனால் சீனாவின் குறிக்கோள் தெளிவானது அதாவது அமெரிக்காவின் சக்தியின் வலுவை தனக்கு தேவையான பிராந்தியத்தில் குறைப்பதே அதன் பிரதான நோக்கம். அதனை உறுதியான வர்த்தக உடன்பாடுகள் மற்றும் மென்மையான இராஜதந்திர நகர்வுகள் மூலம் சீனா சாதிக்க முயன்று வருகின்றது.

மேலும் அமெரிக்காவை போல நேரிடையாக தனது இராணுவத்தை தனது நேசநாடுகளில் இறக்காது, அந்த நாடுகளின் இராணுவபலத்தை அதிகரித்து அதனை தனது இராணுவமாக எதிர்காலத்தில் பயன்படுத்தும் திட்டத்தை தான் சீனா கொண்டுள்ளது.

உதரணமாக மியான்மார் நாட்டு இராணுவத்தை நன்கு பலப்படுத்தியுள்ள சீனா அதற்கான முழு படைக்கல உதவிகளையும் தானே வழங்கி வருகின்றது. மியான்மார் நாட்டு படையினரின் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களையும் சீனாவே கையகப்படுத்திள்ளது. அதனைப்போலவே பாகிஸ்த்தான் இராணுவத்தை பலப்படுத்தியுள்ள சீனா அதன் வான்படையுடன் இணைந்து ஜேஎஃப்-17 என்ற (JF-17 Thunder) விமானந்தாங்கி கப்பலில் கொண்டு செல்லப்படும் அதி நவீன தாக்குதல் விமானத்தை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் ஒன்றின் பெறுமதி 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அமெரிக்கா கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் எஃப்-18 ரக (F/A-18A/B/C Hornet and the F-16A/B Falcon)விமானங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிறிலங்காவின் 450,000 படையினரும் சீனாவின் படையினராக செயற்படும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதை படைத்துறை வல்லுனர்கள் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் தொழில்நுட்பத்தை பெற்று தொலைதொடர்பு செய்மதி ஒன்றை ஏவுவதற்கும் சிறீலங்கா முயன்று வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் செய்மதி என்ற போர்வையில் சீனாவே செய்மதியை ஏவப்போகின்றது.

மேலும் தொடரூந்து பாதைகளின் புனரமைப்பு, துறைமுக அபிவிருத்தி, மின் உற்பத்தி, இராணுவத்தளங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்கள், விவசாயம், பொருளாதார வலையங்களை உருவாக்குதல் என 6.9 பில்லியன் டொலர் முதலீட்டை சீனா சிறீலங்காவில் மேற்கொண்டுள்ளது.

சிறப்பு பொருளாதார வலையங்கள், 1000 ஏக்கர் நிலத்தில் மரவள்ளிக்கிழக்கு பயிர்ச்செய்கை, நுரைச்சோலையில் 900 மெகாவட் அனல் மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டையில் துறைமுகம், கொழும்பு – கட்டுநாயக்கா விரைவு பாதை, பலாலி – காங்கேசன்துறை தொடரூந்து பாதை, யாழில் இராணுவத்தினருக்கான வீடமைப்புத்திட்டம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தளங்களை அமைத்தல் ஆகிய திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகின்றது.

இந்த திட்டங்களை மேற்கொள்வதற்காக 25,000 சீனா தொழிலாளர்கள் சிறீலங்காவிற்குள் நுளைந்துள்ளனர். சுண்ணாகம் பகுதியில் 36 மெகாவற் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்காக சீனா உதவிகளை மேற்கொண்டுள்ளதுடன், அதற்கான 50 சீனா தொழிலாளர்களையும் தருவித்து அங்கு நிரந்தரமாக குடியமர்த்தியுள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த மின்னிலையத்தை பராமரிப்பதற்காக அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் என சீனா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தான் இந்தியாவின் அச்சத்திற்கு காரணம். ஆனால் இது தாமதமாக உணரப்பட்டுள்ள அச்சமாகவே கருதப்படுவதுடன், 1971 ஆம் ஆண்டு பங்களாதேசத்தை உருவாக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டதை போன்றதொரு நிலையை அது தற்போது எட்டியுள்ளது என்பதையே அதன் அச்சம் எடுத்துக்காட்டுகின்றது.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (16.05.2010)