இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலித் தலைவர்களுடன் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரி விஜய் நம்பியார் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் தொடுத்த கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி இதனைத் தெரிவித்தார்.
தலைமை அதிகாரி விஜே நம்பியாருடன் கதைத்த பின்னர் புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்ததாக பிலிப் அல்ஸ்ரன் கூறியிருந்தார். அவர்களை வெளியே வருமாறு ஊக்குவித்ததில் விஜய் நம்பியாரின் பங்களிப்பு என்ன என்பதே கேள்வியாகும்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:
கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்டிருந்த சில நெருக்கடிகள், துன்பங்களிலிருந்தும் பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்க்கும் முயற்சியை ஐ.நா. மேற்கொண்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
இரண்டாவது விஜயமாக மே யில் நான் சென்றிருந்தேன். நான் சம்பந்தப்பட்டிருந்தது தொலைபேசி மூலமான உரையாடலாகும்.
தொலைபேசி மூலம் எனக்கு செய்தியொன்று கிடைத்திருந்தது. பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகம் மற்றும் ஐ.நா.தலைமையகம் ஊடாக சண்டே ரைம்ஸ் நிருபரிடமிருந்து எனக்கு செய்தி கிடைத்திருந்தது. இரு தமிழ்த் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சாத்தியப்பாடு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச முடியுமா என்று நான் கேட்கப்பட்டேன்.
இந்த அழைப்பை நான் பெற்ற போது அரச அதிகாரிகளுடன் தொடர்பை மேற்கொள்ள முயற்சிப்பதாக கூறினேன். அதனை அதே தினத்தில் செய்தேன். இது மே 17,18 ஆம் திகதியாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
இலங்கை அதிகாரிகளுடன் பேசினேன். அவர்கள் சரணடைய விரும்புவதாக சண்டே ரைம்ஸ் நிருபர் கூறியிருந்தார். மூன்றாம் தரப்பூடாக அதனைச் செய்ய அவர்கள் விரும்பியிருந்தனர். இந்த விடயத்தை அவர்களிடம் (இலங்கை அதிகாரிகளிடம்) தெரிவித்தேன். போரின் சாதாரண கைதிகள் போல் அவர்கள் நடத்தப்படுவார்கள் என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு வந்தால் சரணடைய அனுமதிக்கப்படுவார்கள் என்பது அவர்களிடமிருந்து கிடைத்த பதிலாகும்.
ஆனால் சரணடையுமாறு கோரப்பட்டவர்களுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என்பதை விஜய நம்பியார் தெளிவு படுத்தியுள்ளார். அவர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை.
அவர் இலங்கை அரசுத் தலைவர்களுடன் பேசினார். தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்தார் என்றார் பான் கீ மூனின் பேச்சாளர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.