அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியவுடன் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கோத்தபாயவின் விஜயத்திற்கான காரணம் குறித்து எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா தொடர்பான கடுமையான பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாயவின் அமெரிக்க விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சிங்கப்பூரில் வைத்து ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் – எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரப்பணிக்கு அமெரிக்க நிதி வழங்கியதாக கோத்தபாய குற்றஞ்சாட்டியிருந்தார். இதனையடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கோத்தபாயவின் குற்றச்சாட்டுக்கு தனது மறுப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று தேர்தல் காலப்பகுதியில் பொன்சேகா தெரிவித்திருந்த தகவலை அடுத்து, அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாயவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவேண்டும் என்று அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே.
கடந்த தடவை அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க விமானநிலையம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்பட்டார் என்று தகவல் ஒன்று வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.