போரின்போது எவரும் குற்றம் இழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதனை செய்தவர்கள் எனது உறவினராகவோ எனது இராணுவத் தளபதியாகவோ எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். குற்றம் குற்றம்தான்.அதனை புரிந்தவர்களை நாம் தண்டிக்கவேண்டும். ஆனால், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காக ஒருவரை நாம் தண்டிக்க முடியாது. எனவே பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததற்காக சர்வதேச சமூகம் இலங்கையைத் தண்டிக்க விரும்பினால் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேச்சு நடத்தி இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. அதனாலேயே நான் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். நான் அவர்களை நம்புகின்றேன். அவர்களும் என்மீது நம்பிக்கைகொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு வடிவம் வருமாறு :
கேள்வி: தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டு ஒரு வருடம் கழிந்து விட்டது. உங்கள் நாட்டின் தற்போதைய நிலைமை என்ன?
பதில்: மக்கள் இப்பொழுது சுதந்திரமாக நடமாடுகிறார்கள். வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் மக்கள் பிரயாணம் செய்கிறார்கள். இதனால் மக்கள் ஒருவரோடொருவர் பேசிப் பழகுகிறார்கள். அவரவர் தொழில்களை செய்கிறார்கள். பரஸ்பரம் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். இதுதான் எங்களுக்கு முதலில் தேவை.
கேள்வி: ஆனால், யுத்தம் ஆரம்பிக்கும் போது நிலவிய குறைபாடுகளுக்கு யுத்தம் முடிவடைந்து ஓராண்டு கடந்தும் நீங்கள் தீர்வுகாணவில்லை என்று சிலர் கூறுகிறார்களே? தமிழ் சமூகம் இன்னமும் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணருகிறார்களே?
பதில்: அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் சில அரசியல்வாதிகள் இந்த பிரச்சினைகளை கிளப்புகிறார்கள். அல்லது சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு கூறுகின்றன. இப்பொழுது நீங்கள் முகாம்களுக்கு சென்று முதலில் உங்களுக்கு என்ன தேவை என்று அவர்களிடம் கேட்டால், "எனது வீட்டை நான் திரும்பவும் பெறவேண்டும், எனக்கு ஒரு வேலை தேவை, எனது பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டும்" என்றே அவர்கள் கேட்பார்கள். வேறு எதையும் அவர்கள் கேட்க மாட்டார்கள்.
எனவே முதலில் அவர்களை நாங்கள் மீள குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தெற்கில் ஏனைய மக்கள் அனுபவிப்பவற்றை இவர்களுக்கும் வழங்க வேண்டும். முதலில் அவர்கள் அவற்றை அனுபவிக்கட்டும். அதன் பின்னர் அவர்கள் தங்கள் சொந்த பிரதிநிதிகளைத் தெரிவு செய்வார்கள். நாடாளுமன்றத்திற்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் வரும் அவர்களது பிரதிநிதிகளுடன் நாம் எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: அப்படியானால் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூறுவது என்ன? தமிழ் சமூகத்திற்கு நீங்கள் எதையும் செய்வதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?
பதில்: துரதிஷ்டவசமாக, நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை அதுதான். ஏனென்றால் புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை திரும்ப விருப்பமில்லை. அவர்கள் நல்ல வசதிகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஒருபோதுமே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவில்லை. கொழும்புக்கு அப்பால் வடபகுதிக்கு அவர்கள் சென்றதில்லை. மக்களை அவர்கள் சந்திக்கவில்லை.
மக்களுடன் அவர்கள் கலந்துரையாடவில்லை. நான் இப்போது சாதாரண மக்களை யாழ்ப்பாணத்தவர்களோ, திருமலை வாசிகளோ, மட்டக்களப்புவாசிகளோ அனைவரையும் சந்திக்கிறேன். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திற்கோ கிளிநொச்சிக்கோ சென்றார்களா என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
கேள்வி: தாங்களும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் எனக் கோரும் தமிழ் குழுக்களை நீங்கள் இப்பொழுது வைத்திருக்கிறீர்கள். தாங்கள் தங்கள் சமூகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தமிழ் அரசியல்வாதிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். இவர்கள் மீது உங்களால் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?
பதில்: நான் அவர்களை நம்புகிறேன். அவர்களும் எங்களை நம்பவேண்டும். அதனால்தான் என்னுடன் பேச வருமாறு நான் அவர்களை அழைக்கிறேன். இல்லாவிட்டால் அவர்களை அழைக்கமாட்டேன். ஏனென்றால், இந்த அரசியல்வாதிகளில் பலர் பயங்கரவாதிகளான விடுதலைப்புலி இயக்கத்தினரை ஆதரித்தவர்கள். விடுதலைப்புலிகளுக்கு அவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்தவர்கள். எனவே தற்போது நாங்கள் அதனை சமாளித்துக் கொள்வோம்.
நாங்கள் அவர்களை அழைத்துள்ளோம். அவர்கள் எங்களிடம் வரவேண்டும். எங்கள் அதாவது அரசாங்கத்தின் கஷ்டங்களையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இணக்கப்பாட்டுக்கு அவர்கள் வரவேண்டும். நாங்கள் தயார். ஏனென்றால் என்னைப் பொறுத்த மட்டில், தமிழரோ, முஸ்லிமோ, சிங்களவரோ எல்லாம் ஒன்றுதான்.
கேள்வி: நீங்கள் இந்த யுத்தத்தை வரவழைத்துக் கொண்டீர்கள். தற்போது அதனை முடித்து வைத்தீர்கள். குறிப்பாக, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இவ்வளவு எண்ணிக்கையிலான சிவிலியன்களின் உயிர்களை இழக்க வேண்டியது தவிர்க்க முடியாததுதான் என்று நீங்கள் உள்ளூர நம்புகிறீர்களா?
பதில்: நான் அதனை மறுக்கிறேன். ஏனென்றால் எந்தவொரு சிவிலியனையும் நாங்கள் கொல்லவில்லை.
கேள்வி: இலங்கை இராணுவம் சிவிலியன்கள் எவரையும் இலக்கு வைக்கவில்லை என்று உங்களால் உறுதியாக, நம்பிக்கையாக கூறமுடியுமா?
பதில்: ஆம்.
கேள்வி: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்? அது ஒரு யுத்தமல்லவா? அதில் நடந்தவற்றை எவ்வாறு உறுதியாக கூறமுடியும்?
பதில்: சரிதான். அது ஒரு யுத்தம்தான். மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு வந்ததிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். இலங்கை இராணுவம் வேறுவிதமாக நடந்து கொண்டால், அதாவது சிவிலியன்களுக்கு எதிராக நடந்து கொண்டால், சிவிலியன்கள் எங்களை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள். எங்கள் முகாம்களுக்குள் அவர்களில் 300,000 பேர் நுழைந்திருக்க மாட்டார்கள். அதிலிருந்து அவர்கள் எங்கள் இராணுவத்தை நம்பினார்கள் என்பது தெளிவாகிறது. அப்படியின்றேல் அவர்கள் எங்கள் பிரதேசத்தினுள் பிரவேசித்திருக்கமாட்டார்கள். அதனால்தான் சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்று நான் கூறுகிறேன்.
கேள்வி: இலங்கை இராணுவம் யுத்தத்தின் போது எவ்வித குற்றச் செயல்களையோ யுத்தக் குற்றச் செயல்களையோ புரியவில்லை என்று நீங்கள் உறுதியாக நம்பினால் எதற்காக ஒரு சுயாதீன குழு இலங்கைக்கு வந்து சுயாதீனமாக விசாரணைகளை நடத்த நீங்கள் அனுமதிக்கிறீர்களில்லை?
பதில்: இது ஒரு உள்விவகாரம். எனது நாட்டு உள்விவகாரங்களை வேறு ஒரு நாடு அல்லது அரச சார்பற்ற நிறுவனம் விசாரிப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதனால்தான் நாங்கள் ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். ஏதாவது அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
கேள்வி: எனவே நீங்கள் நியமித்துள்ள ஆணைக்குழு யுத்த குற்ற செயல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
பதில்: குற்றங்கள் ஏதாவது புரியப்பட்டிருந்தால் அவர்கள் வந்து எம்மிடம் கூறுவார்கள் நாங்கள் அது பற்றி விசாரிப்போம்.
கேள்வி: குற்றம் செய்ததாக காணப்படுவோர்மீது நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்: ஆம். நிச்சயமாக.
கேள்வி: அவர்கள் உங்கள் ஆட்களாக இருந்தாலும்....?
பதில்: அது ஒரு குற்றமாக இருந்தால் அதனை செய்தவர் எனது உறவினராகவோ, எனது இராணுவ தளபதியாகவோ எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன. குற்றம் குற்றம்தான். அதனை புரிந்தவர்களை நாம் தண்டிக்க வேண்டும். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக ஒருவரை நாம் தண்டிக்க முடியாது. எனவே பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக சர்வதேச சமூகம் இலங்கையை தண்டிக்க விரும்பினால் அதற்கு நான் உடன்பாடானவன் அல்லன்.
கேள்வி: இருந்தாலும், சர்வதேச சமூகத்தின் கவலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உள்ளக விசாரணை ஒன்றை நீங்கள் நடத்தினால், அதாவது ஓர் அரசாங்கம் தன்னைத் தானே விசாரிக்குமானால் வெளிப்படை தன்மை எங்கே? அங்கே எவ்வாறு....... (ஜனாதிபதி குறுக்கிடுகிறார்)
பதில்: அதனை நீங்கள் அமெரிக்கர்களிடம் கேட்பதில்லையா? ஈராக்கைப் பற்றி அல்லது ஆப்கானிஸ்தானைப் பற்றி அல்லது பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்று பிரித்தானியாவிடம் கேட்பதில்லையா? எங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
இலங்கையை இவ்வாறு நடத்தாதீர்கள். ஏனென்றால் நாங்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்தவர்கள். துரதிஷ்டவசமாக, மற்றைய நாடுகள் இன்னமும் பயங்கரவாதத்தை தேற்கடிக்கவில்லை. நாங்கள் அதனை செய்துள்ளோம்.
கேள்வி: உங்கள் முன்னேற்றப்பாதையில், 30 வருடகால யுத்தத்தின் பின்னர் இலங்கை தன்னை மீண்டும் கட்டியெழுப்பும் நிலையில், நீங்கள் கூறுவது போன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் தடை என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: நம்பிக்கையை இயன்ற அளவு விரைவில் நாம் கட்டியெழுப்ப வேண்டும். இப்பொழுது அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சவாலை நாம் முகம்கொடுக்க தயாராக இருக்கிறோம். 30 வருடங்களின் பின்னர் பயங்கரவாத சவாலை நாம் எதிர்கொண்டு வெற்றியும் பெற்றோம்.
தற்போது பொருளாதார அபிவிருத்தி எம்மை எதிர்கொள்ளும் சவாலாகும். எனவே நாம் அதற்கு முகம்கொடுக்கிறோம். ஒரு வருடத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களை நாம் மீள குடியமர்த்தி விடுவோம். 90 சதவீதமானோர் ஏற்கெனவே குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள். எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் அனைவருமே குடியமர்த்தப்பட்டு விடுவார்கள்.
[நன்றி:வீரகேசரி.]







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.