Saturday, May 29, 2010

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்! ஒரு உண்மையின் பார்வை!

கால நகர்வின் உலக வரலாற்றுச் சம்பவங்களை இலகுபடுத்தி சுட்டி உரைப்பதற்காக காலங்கள் வரையறுக்கப்பட்டிருந்தது. திரேத காலத்திற்கு முன் - திரேத காலத்திற்கு பின் - கலியுக காலத்திற்கு முன் - கலியுக காலத்திற்கு பின் - கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்கு பின், இவைபோன்று பல காலக் குறியீடுகளை அறிவோம்.
ஆனால் தற்பொழுது இலங்கையில், அதுவும் விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பின் காலத்தை வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தநிலையில் இலங்கை அரசும், குறிப்பாக தமிழீழ மக்களும் உள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

அதுவானது, விடுதலைப் புலிகளின் பின்னடைவு முழுத் தமிழர்களுக்கும் ஒரு பாதிப்பின் அதிர்வை கொடுத்துச் சென்றதென்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. ஆதலால்,
'விடுதலைப் புலிகளின் முன் - விடுதலைப் புலிகளின் பின்' என குறித்துரைப்பது பொருத்தமாக இருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவின் பின் இலங்கைச் சிங்கள பேரினவாதிகளின் மனப் போக்கில் தமிழருக்கெதிரான வக்கிரப் போக்கு நாளுக்கு நாள் மிகையாகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்விடத்தில் மாமனிதர் சிவராம் விட்டுச் சென்ற தீர்க்கதரிசனம் நினைவுக்கு வருகிறது.

'எந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களமக்களின் வக்கிரச் சிந்தனைகள் ஒருபோதும் எவராலும் மாற்ற முடியாது. எவ்வழியில் முயன்றாலும் பலிதமாகாது. ஏனெனில், முயன்று தோல்விகண்ட எனது அனுபவத்தின் வெளிப்பாடே இதுவாகும்'. இந்த நிலையே இன்றுவரை சிங்கள மக்களின் நடைமுறையில் உள்ளது.

யாழ்ப்பாணம்' என்பது(பு.மு.-புலிகளுக்கு முன்) தமிழரின் தனித்தாயகம் என்பதும், தமிழரைத்தவிர வேறு எவருக்கும் உரிமை கொண்டாட அனுமதி இல்லை என்பதையும் பேரின வாதிகள் நன்கு அறிந்திருந்தனர். அதுமட்டுமல்லாது வடகிழக்கு அடங்கலாக தமிழரின் தனிப் பிரதேசமாக நிர்வாகம் நடந்தேறியதையும் மறந்துவிட முடியாது. தமிழரின் தாயகப் பகுதிக்கு செல்லும் தமிழர் அல்லாதவர்கள் வேற்று நாட்டுக்கு செல்லும் உணர்வைப் பெறுவார்கள். இதற்கு இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பாதுகாப்புக் கடவைகளும் (Checkpoint) காரணமாகும்.

2009ம் ஆண்டு மே மாதகாலம் வரை சிங்களப் பகுதி - தமிழ்ப்பகுதி என இலங்கையில் இரு பிரிவுகள் இருந்தன. இரு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையே சோதனைச் சாவடிகளைக் கொண்ட கடவைகள் அடையாளமாக இருந்தன. படையினரின் அனுமதியுடன் தான் (அதாவது VISA) பெற்றுச் செல்ல முடிந்தது. அதனைக் கடந்து சிறிது தூரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிகளும் அமைந்திருந்தன.

புலிகளின் அனுமதியுடன் தான் தமிழர் தாயகத்தினுள் நுழையலாம். இது அனைத்து சிங்கள மக்களுக்கும் தமிழ்ப் பகுதிகள் ஒரு வேற்று நாடு என்ற உணர்வைப் பிரதிபலித்து இருந்தன.

இரு கட்டுப்பாட்டு பகுதிகளுக்கிடையே இருந்த முக்கிய கடவைகள்

கிழக்கு மாகாணம்

மண்டூர்
பட்டிருப்பு
களுதாவளை
அம்பலாந்துறை
மண்முனை
வவுண தீவு
சந்திவெளி
கறுப்புப் பாலம்
சித்தாண்டி
கிரான்
கிண்ணியடி
வாழைச்சேனை
மாங்கேணி
மகிந்தபுரம்(ஈச்சிலம்பற்று-வெருகல்)
கட்டைபறிச்சான்(மூதூர்)
பள்ளிக் குடியிருப்பு
கெவுளிமுனை(சம்பூர் கடல்வெளி)

வடக்குமாகாணம்

உயிலங்குளம்
ஓமந்தை
முகமாலை
முல்லைத்தீவு(கடல்வெளி)
மாதோட்டை(கடல்வெளி)

தற்பொழுது இவையாவும் தகர்க்கப்பட்ட நிலையில், இருவேறுபட்ட விழுமியங்களையும், நாகரீகங்களையும் கொண்ட இரு இனங்கள்(தமிழ், சிங்களம்) பரஸ்பரம் 'ஒற்றுமை' என்ற மகுடத்தின் கீழ் அரசு இணைக்க முற்பட்டாலும் அதை நிலைப்படுத்த முடியாமல் எதிர்காலத்தில் தோல்வியடையப் போகின்றது என்பது உண்மையாகும். இனங்களுக்கிடையே பரஸ்பர ஊடுருவலானது அடித்தளத்தில் 'பெரும்பான்மை மக்களின் குடியேற்றம்' என்பதுதான் உறைந்து கிடக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் தமிழரின் அடையாளமாக இருக்கின்ற யாழ்ப்பாணத்தை சகித்துக் கொள்ள முடியாத பேரினவாதிகள், அதை சிங்களக் குடியேற்றத்தின் மூலமாக ஐதாக்க முனைகிறார்கள்.

'அத்துமீறிய குடியேற்றம்' என்ற பெயர் மருவி, இனிமேல் 'அதிகார இணக்க குடியேற்றம்' என மாற்றமடையப் போகின்றது. இருப்பினும் யாழ்ப்பாண காணிகளின் நிலையைப் பொறுத்த மட்டில் அவ்விடத்து 'தேசவழமை' சட்டம் காணிகளை அபகரிப்பதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச கிளிநொச்சி பகுதியில் படையினருக்கு வீடமைக்க திட்டமிட முனைவது, அப்பகுதியில் 'தேசவழமை சட்டம் வழக்கொழிந்து போயிருக்கலாம் என எண்ணி சிங்களக் குடியேற்றத்தை அமைக்க எண்ணியிருந்ததேயாகும். ஆகவே முன்னெச்சரிக்கையோடு, எதிர்கால நலன் கருதி மீண்டும் 'தேசவழமைச் சட்டத்திற்கு' யாழ் மக்கள் உயிர் கொடுத்தாக வேண்டுமென்பது வரலாற்றுக் கடமையாகும்.

தர்மத்தின் ஒளிவிளக்காக விளங்கும் கெளதம புத்தரின் சிறப்பைக் கொண்டாடுவதற்கு தமிழ் மக்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். அதை பெளத்த தர்மத்தோடு மட்டும் இல்லாமல் இன அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒரு காரணியாக மாறும்போது முரண்பாடு தோன்றுகிறது. இவ்விடத்தில் பெளத்தத்தை வளர்த்த தமிழர்களாகிய கவுந்தி அடிகள், அறவாணர், மணிமேகலை மேலும் பலரை இவ்விடத்தில் நினைப்பது பொருத்தமாகும்.

'மாதகல் துறைமுகத்தில்' சங்கமித்திரையும் சகோதரன் மகிந்தனும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெளத்தத்தை பரப்புவதற்காக வந்திறங்கியதாக வரலாறு உண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்களவர்கள் அல்ல என்பதை இலங்கைச் சிங்களவர்கள் உணர்ந்துகொள்ளல் வேண்டும். அல்லது எதிர்காலத்தில் தமிழரின் தாயக உரிமையை பறித்தெடுக்க வேண்டுமென்பதற்காக மாதகலில் வந்திறங்கவுமில்லை. அல்லது தற்போதைய ஜனாதிபதியின் மனைவி அடிக்கல் நட்டு பெளத்த விகாரை அமைப்பதற்கான தீர்க்க தரிசன நடவடிக்கைகளுமல்ல. இங்குதான் உண்மையான 'பெளத்த தர்மம்' மரணித்து கிடக்கிறது. அதாவது பெளத்தத்தை தளமாக கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதுதான் இலங்கையில் பெளத்த நெறி செயலிழந்திருப்பதற்கு காரணம் ஆகும்.

இதுபோன்ற பல தடைகளையும் தாண்டி யாழ்ப்பாணத்துக்குள் அரசு புகுவதற்கு கைக்கொள்ளும் வழியே வெசாக் கொண்டாட்டங்களாகும்.

சமத்துவம் பேணல்

பெளத்தம் சார்ந்த எந்தத் தொடர்பும் இல்லாத யாழ்ப்பாணத்தில் வெசாக்கூடுகள் அமைத்து கோலாகலமாக கொண்டாடுவது சிங்கள மக்களுக்கு இறுமாப்பாக இருந்தாலும் அனைத்து தமிழ்மக்களுக்கும் பெரும் காழ்ப்புணர்வையே வெளித்தள்ளும் என்பது யதார்த்தமாகும்.

உண்மையிலே ஒரு நாட்டிலே வாழும் இனங்கள் சமத்துவமாக வாழ வழியமைத்துக் கொடுக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கும், ஜனாதிபதிக்கும் ஏற்படுமானால், அத்துமீறி பெளத்த ஆலயங்களாக மாற்றியிருக்கும் தமிழ்மக்களின் இந்து ஆலயங்களை மீண்டும் தமிழ்மக்களிடமே கையளித்து, அதன் வழிபாடுகளில் சிங்கள மக்களும் பங்கேற்கலாம்.

மேலும், கூடவே தமிழ்மக்களின் இறைமையின் வெளிப்பாடுகளை உணர்த்தும் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு மீண்டும் புத்துயிர் வழங்குவது ஒரு குற்றமான செயல் அல்ல. 1974 ம் ஆண்டுகளில் நடந்தேறிய தமிழாராட்சி மாநாட்டின் துன்பியல் நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பது இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை பேணுவதற்கான படிமங்களாக கொள்ளலாம். ஆகவே தமிழ் தேசிய கூடமைப்பு உட்பட அனைத்து தமிழ் உணர்வாளர்களும் ஒன்றிணைந்து தமிழர் எழுச்சி விழாக்களை பொறுப்பேற்று கொழும்பிலும் மற்றும் தென்பகுதிகளிலும் ஜனநாயக ரீதியாக நடாத்துவதற்கு முன்வருதல் வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் அரசு வழங்கினால் அதனை நல்ல சகுனமாக கொள்ளலாம். அப்போதுதான் யாழ்ப்பாணத்தின் வெசாக் கொண்டாட்டங்களை விமர்சையாக கொண்டாடுவதை பொருத்தமாகவும் தர்மமாகவும் கொள்ளலாம்.

அரசின் பரீட்சார்த்த முன்னேற்பாட்டுப் பணிக்களுக்கான சில தரவுகள்!

* தேவேந்திர முனையில்(அம்பாந்தோட்டை) அமைந்த சந்திர மௌலீச்சர(சிவன்) ஆலயம்
* இரத்மலானை சிவனாலயம்-தற்போது பெளத்த ஆலயம்
* கதிர்காமம் - கத்தரகம
* சிவனொளிபாத மலை சிவனாலயம்.
* அனுராதபுரம் சிவனாலயம் - தற்போது அபெய விகாரை.
* திரியாய் சிவனாலயம் - தற்பொழுது கிரி விகாரை.
* சேர்வில் காட்டுப் பிள்ளையார் ஆலயம்(வில்லு - குளம்) - தற்பொழுது விகாரை
* பொலநறுவை(சனநாத மங்கலம்) சிவாலயம் - தற்பொழுது விகாரை

இலங்கையில் இதுபோன்ற பல தரவுகளுடன் உள்ளன. இவற்றுக்கெல்லாம் தீர்வு எப்போது என்பதுதான் கேள்வி. வெறுமனே தகவல்களை படிப்பதோடு நமது கடமைகள் முற்றுப்பெற்று விட்டனவா? அதற்கான செயல்வடிவம் கொடுத்து எமக்கான அடையாளங்களை பேணவேண்டாமா?

இதற்கெல்லாம் யாரை நாடுவது?

யார் இதனை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவது?

யார் இவற்றுக்கு நீதிபதி?

இவை புரியாத புதிர் என கிடப்பில் போட்டுவிட முடியாது.

யாராவது ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்க வேண்டுமென்பது நியதி.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள்! அதிலும் ஈழமக்களின் ஆணையப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் களமிறங்க வேண்டும்.

அடுத்ததாக, அரசின் அமைச்சுப் பதவிகளில் வீற்றிருக்கும் தமிழ் அமைச்சர்கள்(திரு. முரளீதரன், திரு. டக்ளஸ் தேவானந்தா போன்றோர்.) தமிழ்மக்களின் உரிமைத்துவம் சார்பாக களமிறங்க வேண்டும். தமிழ்மக்களின் நியாயப்பாடுகளை சிங்களமக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்தல் வேண்டும். ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ! அதுவல்ல முக்கியம்.இந்த அஞ்சலோட்டம் ஆரம்பித்து வைக்கப்படல் வேண்டும். இறுதியாக ஓடி முடித்துவைக்கும் பொறுப்பிற்கு புலம்பெயர்வாழ் புத்திஜீவிகள் ஆயத்த நிலையில் உள்ளார்கள் என்பதை சிங்கள அரசுத்தலைமைகள் உட்பட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை எனது சிற்றறிவிற்கெட்டியவை!

இதைவிட சிறப்பான திட்டங்களை வகுக்க அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் உரிமை உண்டு!

இறுதியாக நினைவில் நிற்கும் ஒரு கவிதை வரிகள்!

'ஒருசில பேர்கள் ஒருசில நாட்கள் உண்மையின் கண்களை மூடிவைப்பார்
பொறுத்தவரெல்லாம் பொங்கியெழுந்து மூடிய கண்களை திறந்து வைப்பார்'

கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.