Sunday, May 16, 2010

முள்ளிவாய்க்கால் அவலங்கள் இன்னும் அகலவில்லை : இறுதிக்கட்டப் போரில் சிக்குண்ட மக்கள்

முள்ளிவாய்க்காலில் அனுபவித்த துயரங்களிலிருந்து இன்னும் தமது மனம் விடுபடவில்லை என அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பலர் கூறியுள்ளனர்.

யுத்தம் முடிந்து ஒருவருடம் பூர்த்தியாகும் வேளையில், முள்ளிவாய்க்காலில் எதிர்கொண்ட அனுபவம் குறித்து கோப்பாயைச் சேர்ந்த பூ.சபானந்த் என்பவர் கூறுகையில்,

என் இறுதி நாட்கள் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடும் என்ற எண்ணமே என் மனதில் அலைமோதியது. அதிலிருந்து மீள்வதற்காக என்னால் என்ன விலை கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தேனும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணமே தினம் தினம் மேலோங்கியிருந்தது. அதன் வலி, வேதனை இன்றும் தொடர்வதாகவே நான் உணர்கிறேன் என்றார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த வை. சிதம்பரநாதன் இது குறித்து கூறுகையில்,

அப்போது உயிரே ஒரு சுமைபோலத்தான் எனக்குத் தோன்றியது. என்ன மனித வாழ்க்கை இது என்று எண்ணினேன். வாழ்வதைவிட சாவது மேல் என்று தோன்றியது. சாப்பாடு இல்லை.
ஆனால், எறிகணைகள் தாராளமாக வரும்.

சாவுகள் தாராளமாக நடக்கும். எதைப் பற்றியும் யாடம் கேட்க முடியாது. எல்லாருக்கும் மேலாக சாவு அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சனங்களின் அவலக் குரலும் எறிகணைகளின் வெடி ஒலியும் வேறு விமானத்தின் இரைச்சலும் எந்த நேரம் உயிரைத் துளைத்துக் கொண்டேயிருந்தது.

அந்த மரண காலத்தில் இருந்து எப்போது விடுபடுவேன் என்று இருந்தேன். அது ஒரு நரக உலகம். அந்த உலகத்தில் இருந்து தப்புவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இப்போது நான் உயிருடன் இருப்பது ஒரு அதிசயமான நிகழ்ச்சிதான் என்றார்.

விசுவமடுவைச் சேர்ந்த ச.பத்மாசலம் கூறு கையில்,

நானும் எனது மனைவியும் எங்களது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக பட்ட பாடுகள், சுமந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல, அது எண்ணில் அடங்காது.

உண்ண உணவில்லை. உணவிருந்தாலும் உண்ண முடியாத நிலை. இதற்கிடையில் பிள்ளைகளின் பசி ஒருபுறம். அதற்கிடையே கூவி வரும் ஷெல்களும் சீறி வரும். துப்பாக்கி ரவைகளும் உயிரை மக்களிடமிருந்து அடிக்கடி பறித்துக்கொண்டிருந்தன.

அடிக்கடி அருகில் ஷெல் விழுவதும் துப்பாக்கி ரவைகள் ஒன்றை ஒன்று முந்தி உயிர் குடிப்பதையும் கண்ணால் நாம் கண்டிருந்தோம். இன்றும் அந்த நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு அகலவில்லை என்றார்.

மாங்குளத்தைச் சேர்ந்த செ.தமிழ்விழி கூறுகையில், எங்களுடைய வாழ்க்கையே தலை கீழாக மாறிய இடம் இந்த முள்ளிவாய்க்கால். நாங்கள் வரலாற்றில் மறக்கடியாத சோகங்களும் அவலங்களும் நடந்த இடம் அது.

யுத்தம் எப்படியும் எதிர்பாராத முடிவுகளோடுதான் முடியும். நாங்கள் இதற்குள்ளிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும். பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண் டும் என்று அடிக்கடி என்னுடைய கணவர் சொல்வார்.

ஆனால், அவர் ஆசைப்பட்டதைப் போல நான் பிள்ளைகளைக் காப்பாற்றி விட்டேன்.

அதேவேளை அப்பாவையும் தம்பியையும் கணவரையும் இழந்து விட்டேன். இதை என் கண்ணுக்கு முன்னே கண்டேன். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவர்களை அங்கே புதைப்பதற்காக அப்பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை இந்த முள்ளிவாய்க்காலின் நினைவுகள் என்றைக்கும் மாறாது என்றார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சி. விமலேஸ்வரி கூறுகையில்,

நாங்கள் முகாமில் இருந்து வந்து பத்து நாள் ஆகின்றன. ஒரு வருடமாக முகாமில்தான் இருந்திருக்கிறோம்.

ஆனால், முள்ளிவாய்க்காலில் நாங்கள் பட்ட துன்பத்தையும் அங்கே இருந்து தப்புவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களையும் மறக்கவே இயலாது என்றார்.

சாவகச்சேயைச் சேர்ந்த சண்முகம் பரமேஸ்வரன் கூறுகையில், நான் முள்ளிவாய்க்காலைப் பற்றிக் கதைக்க விரும்பவில்லை. அது மனிதாபிமானம் செத்துப் போன இடம். மனிதரை மதிக்காமல் யுத்தத்தைப் பெரிதாக நினைத்ததால் வந்த வினை தான் எல்லாம்.

அங்கே நடந்த கொடுமைகள், அழிவுகளை நான் மீட்டுப் பார்க்க விரும்பவில்லை என்றார்.