அதிகாரப் பகிர்வு குறித்த புதிய யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை எந்த வகையிலும் குறைக்காமல், மாகாணசபைகளுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் ஓர் யோசனைத் திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக காவல்துறை அதிகாரங்களை நீக்கி, ஏனைய காணி உள்ளிட்ட அதிகாரங்களை காவல்துறையினருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பது தொடர்பில் ஏற்கனவே பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜீ-15 மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.





