பருத்தித்துறை இராணுவமுகாமில் நேற்று மாலை குண்டு வெடிப்பும், துப்பாக்கி சத்தங்களும் தொடர்ந்து ஒலித்ததையடுத்து, வடமராட்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள 52 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் தளத்தில்நேற்று மாலை 4.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக துப்பாக்கி வேட்டு சத்தங்களும் கேட்டுள்ளன.
இராணுவத்தினரின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு காரணம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வெடி விபத்துக்கு மின் ஒழுக்குத்தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களைப் படைத்தரப்பு வெளியிடவில்லை. நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.






