Thursday, May 13, 2010

அதிகாரப் பகிர்ந்தளிப்பை இலங்கைக்கு வலியுத்துகிறார்களாம்! – இந்தியா அழைப்பு

பல்வேறுபட்ட சக்திகளையும் உள்ளடக்கியதாக மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக்கூடிய செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்தல் தொடர்பாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் இதனைக் கூறியுள்ளார்.

“அரசியல் இணக்கப்பாடு என்பது நிச்சயமாக கழித்து கூட்டிப்பார்க்கையில் பூச்சியமாகும் விளையாட்டு அல்ல. அதேசமயம் மற்றொன்றுக்கு நட்டம் ஏற்படும் விதத்தில் அதனை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அவ்வாறு வரவும் கூடாது என்றும் நிருபமாராவ் கூறியுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு கணிசமான அளவு அதிகாரங்களை வழங்கும் விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் திருமதி ராவ் குறிப்பிட்டிருக்கிறார்.

“திருத்தமானது பரந்தளவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மாகாண நிர்வாகம் செயற்படுகையில் அத்திருத்தமானது முழு அளவில் ஆதாரத்தனமாக தோற்றம் பெறுகிறது. இந்த மாகாணங்களை மேலும் வலுப்படுத்தி சக்தி மிக்கவையாக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்தியாவின் ஜனநாயகத்துடன் இணைந்த சொந்த அனுபவமானது செயற்பாட்டுத் திறன்மிக்க அதிகாரப் பகிர்வு தொடர்பான பாடத்தை எமக்கு கற்றுத்தந்திருக்கிறது.

அரசியலமைப்பிலுள்ள சம அந்தஸ்து, சமவாய்ப்புகள், சிறுபான்மையினரின் கவலைகளுக்கு தீர்வுகாணுதல், பல்வேறு தரப்பினரும் உள்ளடக்கப்படுவதை உறுதிப்படுத்துதல், வேறுபாடுகளுக்கு தீர்வுகாணுதல் என்பனவற்றுக்கு ஜனநாயக ரீதியில் வெளிப்படையாகத் தீர்வு காண்பதை இந்தியாவின் சொந்த அனுபவம் கற்றுத்தந்துள்ளது என்றும் நிருபமாராவ் கூறியதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், மோதல் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அத்துடன், யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் இருந்திருக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளது.

“13 ஆவது திருத்தத்திலுள்ள அநேகமான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. என்று இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார்.

அங்கு சில விடயங்கள் உள்ளன. பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சில விடயங்கள் இருக்கின்றன. பொலிஸ், காணி அதிகாரங்களை எவ்வாறு அமுல்படுத்துவதென்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகிறோம்.

அதிகாரங்களை இணைத்துக்கொள்வதற்கு மாகாணங்களில் பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் தேவையானதாகும் என்றும் காரியவசம் கூறியுள்ளார்.

அதேசமயம், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் திரும்பிச் செல்ல வேண்டியது முக்கியமான விடயம் என்று நிருபமாராவ் அழுத்தியுரைத்திருக்கிறார்.

“தற்போது உடனடித் தேவையிலிருந்து இடைப்பட்ட தேவை தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது என்று நான் நம்புகிறேன். வாழ்வாதாரத்தை மீள ஏற்படுத்துதல், வாழ்வைக் கட்டியெழுப்பும் ஆற்றல், புனர்நிர்மாணம், புனர்வாழ்வு போன்ற உள்சார் கட்டமைப்பு பணிகளில் இன்று கவனம் செலுத்தப்படுவதாக நம்புகிறேன்.

குறிப்பாக வடபகுதியில் இவை குறித்து கவனம் எடுக்கப்படுவதாக கருதுகிறேன். என்றும் கூறிய நிருபமாராவ் , நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்க வேண்டியவர்கள் இலங்கை மக்களே என்றும் தெரிவித்திருக்கிறார்.

பிணைப்பை ஏற்படுத்தும் பாதைக்கான சந்தியை இலங்கை வந்தடைந்துள்ளது.

ஐக்கியமும் சக இருப்பும் தெளிவான முறையில் தொடர்ந்து வர வேண்டியது அவசியம் எனவும் திருமதி ராவ் கூறியுள்ளார்.