மலேசிய காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் 75 ஈழத்தமிழர்கள் கடந்த 25 ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டு, வதை முகாம் கொடூரத்திற்கு முகம் கொடுத்து இன்று உண்ணாவிரதம் இருக்கும் அவர்களில் பலர் உடல்நிலை குன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் அனைவரும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவிக்கையில்,
"எமது உண்ணாவிரதப் போராட்டம் மலேசிய அரசிற்கு எதிரானது அல்ல. எமது வாழ்க்கையை மீட்டெடுக்க எமது குரல் ஒலிக்கவே இவ்வகையில் போராடி வருகிறோம். எங்களில் யாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது மற்றும் எம்மை ஏற்கும் ஏதாவது ஒரு நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
நாங்கள் அகதி உரிமைக்காய் பயணம் மேற்கொண்டவர்கள். எம்மை நடுக்கடலில்தான் மலேசிய காவல்துறை மீட்டது. நாங்கள் சட்டவிரோதமாக இங்கு கரை ஒதுங்கவில்லை. எம்மை குற்றவாளிகள் போல தடுத்து வைத்திருப்பது நியாயமானதல்ல.
எமக்காய் எம் உறவுகள் ஒவ்வொரு நாட்டிலும் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் வாழ்கிறோம். வதை முகாம்களில் பட்ட மன உளைச்சலை விட இங்கு தடுப்பு காவலில் நாங்கள் பட்ட துயரம் அதிகம். ஒரு மாதம் எமது கோரிக்கையை செவிமடுக்காது இருந்ததாலேயே உண்ணாவிரதம் தொடங்கினோம் " என்றார்கள்.
வன்னியில் இருந்து புறப்பட்ட இவர்கள் கப்பல் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்து நிற்கையில், மலேசிய காவல்துறை கரை சேர்த்தது. அன்று முதல் இன்று வரை இவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளார்கள். சட்டவிரதமாக குடியேறினார்களா என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தமிழர்கள் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் உட்பட அரசியல் பிரமுகர்களைகூட சென்று பார்க்க முடியாத அளவிற்கு கடுமை காட்டியது மலேசிய அரசு. இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரெனே இருவருக்கும் நெஞ்சு வலி அதிகமாக இருந்தும் ஓர் நாள் தவிப்பிற்கு பிறகே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது வேதனைக்குரியது.
பல நாட்கள் தவித்தும், சரியான உணவோ உறைவிடமோ இல்லாததால் தவிப்பிற்கும் வேதனைக்கும் உள்ளான இத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது இவர்களின் பேச்சில் தெரிந்தது.
பல நாட்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்திலும் பொதுவுடமைக் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பாமக உறுப்பினர் வேல்முருகனின் முயற்சியால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை.
ஏற்கனவே கடலில் பிடிபட்டபோதே, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று உறுதியுடன் கூறியதையும் நினைவு கூர்ந்தார்கள்.
தம்மை இந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க உதவும்படியும் ஏதாவது ஒரு நாடோ அன்றி ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களோ தமக்கு உதவ முடிந்தால் இந்த அவலத்திலிருந்து தம்மால் மீளமுடியும் என்று நம்பிக்கையோடு பார்த்திருக்கிறார்கள்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.