வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்தப் பகுதிகள் நம்பமுடியாத அளவுக்கு பயங்கரமான அழிவுகளைக் கொண்டிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். விசுவமடு முதல் புதுக்குடியிருப்பு வரையான பகுதிகளை நேரில் சென்று பார்த்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகித்த அவர் அங்கிருந்து திரும்பியதும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகள் படுபயங்கரமானவையாகவும் நம்ப முடியாத அழிவுகளைக் கொண்டவையாகவும் பார்ப்பதற்கே அதிர்ச்சியை அளிக்கின்றன.
போரின் அகோரத்தை நேரில் பார்வையிடுவது தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் அழிவுகள், அழிவுகள், அழிவுகள் மட்டுமே. விசுவமடு முதல் புதுக்குடியிருப்பு வரையான வீதியின் இருமருங்கும் அடிக்கொரு வாகனங்கள் எரிந்து கிடக்கின்றன. சகல வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன.
அங்கு மட்டும் என்றில்லை, கடந்த நான்கு நாள்களில் நாங்கள் பார்வையிட்ட வன்னிப் பகுதிகள் அனைத்திலும் அழிவுகளை மட்டுமே காணமுடிந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் எவ்வளவோ செல்வச் செழிப்புடனும் நிம்மதியுடனும் வாழ்ந்தவர்கள்.
இன்று அவற்றைத் தொலைத்த நிலையில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மீள்குடியேற்றம் தொடர்பாக அரசு விடும் அறிக்கைகளுக்கும் நேரில் நாங்கள் பார்த்த காட்சிகளும் இடையில் பெரியளவில் வித்தியாசங்கள், முரண்பாடுகள் உள்ளன.
மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு இப்போது அதிகளவில் உதவிகளும், ஆதரவும் உடனடியாகத் தேவையாக உள்ளன. விரைவில் அவர்களுக்கு அவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கிளிநொச்சி, தர்மபுரம், கண்டாவளை ஆகிய பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், அரியநேத்திரன், செல்வராஜா, சிறிதரன், ஈ.சரவணபவன், ஆகியோர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி நகரை நேற்றுக் காலை சென்றடைந்தனர்.
நகரில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
அதன்பின்னர் கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சென்றடைந்தனர், அங்குள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முறிகண்டி, சாந்தபுரம் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இக்கலந்துரையாடலில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறத் தாமதம் காட்டி வருவதற்கான காரணங்கள் குறித்து அம்மக்கள் விவரித்தனர். தமது உடமைகள் அபகரிக்கப்படுவது பற்றியும் முறைப்பாடு தெரிவித்தனர். தாம் தமது சொந்த இடங்களில் குடியமரவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து திருவையாறு வழியாகத் தர்மபுரம் மகாவித்தியாலயத்தை வந்தடைந்த குழுவினர் அப்பகுதியில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். அங்கு இயங்கிவரும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் குழுவினர் உரையாடினர்.
கண்டாவளை மகாவித்தியாலயத்தைச் சென்றடைந்த இக் குழுவினர் இம்மாத முற்பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள், பிரச்சினைகளை அறிந்துகொண்டனர்.
இறுதியாகப் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியூடாக புதுக்குடியிருப்பு வரையும் சென்று பார்வையிட்டனர். அப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் சென்று வரவும் அனுமதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.