Tuesday, May 25, 2010

கொக்கிளாய் சரணாலயம் அழிப்பு! - சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என ஆர்வலர்கள் எச்சரிக்கை!!

போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு சரணாலயத்தின் காடுகள் இயந்திர உடைப்பான்களைக் கொண்டு அழிக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதக் காலப்பகுதிகளில் கொக்கிளாய் பறவைகள் சரணாலயப் பகுதியிலுள்ள 40 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக Sri Lanka Nature Forum என்ற சுற்றுச்சூழல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

35 ற்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வரும் இப் பிரதேசத்தின் காடுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்காவின் அதிகாரிகள் எதுவுமே கூறாது மௌனமாக இருப்பது கவலைக்குரியது என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இச் செயற்பாட்டின் காரணமாக கொக்கிளாய் நீரேரியின் பெரும்பாலான பகுதிகள் குப்பைகளால் நிறைந்துவிடும் என இவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

கொக்கிளாய் ஏரிக்கு அருகே இருக்கின்ற பற்றைக்காடுகள் வேறு பிராந்தியங்களிலிருந்து வரும் பறவைகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயமாக உள்ளது.

மனிதர்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் உட்பட பெருந்தொகையான பற்றைக் காடுகள் இயந்திரங்களின் துணையுடன் அழிக்கப்பட்டிருப்பதாக இப்பகுதிக்குச் சென்றிருந்த Sri Lanka Nature Forum அமைப்பின் திட்ட முகாமையாளர் சஜீவ சமிக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கிலுள்ள வனங்களைப் பாதுகாப்பதற்காக வனத் திணைக்களத்தின் அதிகாரிகளையோ அல்லது காட்டுவிலங்குகளின் அதிகாரிகளையோ சிறிலங்கா அரசு நியமிக்கவில்லை என இவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவதற்காக காடுகளை அழிக்க வேண்டிய தேவை எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்துள்ள சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, இது போன்ற காடழிப்பு நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை தான் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளும் போது இக் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரிப்பதாக அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இநதக் காடழிப்பு நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் தமக்குக் கிடைத்திருப்பதாக பி.பி.சி. தமிழ் சேவையும் தெரிவித்துள்ளது.

ஒரு குறுகிய நிலப்பரப்பில் காடுகள் அழிக்கப்படுவது இலங்கையின் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முனைவர் தங்கமுத்து ஜெயசிங்கம் குறிப்பிட்டுள்ளதாக இச்செய்திச் சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.