வன்னியில் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளில் பெய்துவரும் பெரும் மழை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வாழ்ந்துவரும் தற்காலிக கூடாரங்களுக்குள் மழைநீர் சென்றுள்ளதால் அவை பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புற்ற மக்களுக்கு 50 ஆயிரம் ரூபா வரையான கொடுப்பனவுகள் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வன்னிப் பகுதியில் போரினால் அனைத்தையும் இழந்து, தம் வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு ரூபா 25000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும் சிரமங்களுடன் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்வை ஆரம்பித்துள்ள மக்களை மீண்டும் மோசமான காலநிலையும் கனத்த மழையும் தாக்கியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மழையுடன் சேர்ந்து பலமான காற்றும் வீசி வருகிறது. இதனால் பல வீடுகளினதும் கூடாரங்களதும் கூரைகள் சேதமாகியும் தூக்கி வீசப்பட்டும் உள்ளதால் சேதம் பலமடங்காக உள்ளதாக நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த உடமைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். பல முக்கிய ஆவணங்களும் இதனால் சேதமாகியுள்ளதாக இம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய கூடாரங்களுக்குள் தங்க முடியாத மக்கள் படையினரால் கைவிடப்பட்ட காவலரண்களுக்குள் தஞ்சமடைந்து பாதுகாப்புத் தேடியுள்ளனர். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் எழுந்து இருக்கும் நிலையே தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தினாலும் காற்றினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதேச செயலர்கள் பார்வையிட்டு அவசர உதவிகளைச் செய்து வருகின்றனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.